கெங்கவல்லி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலம் ஒருவர் பலியானார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், ரஷீத் என்பவருக்குச் சொந்தமான ரஷீத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு நிறுவனம், அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறது.
இந்த ஆலையில் தெடாவூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (28), ராஜேந்திரன் ஆகியோர் கடந்த 8ம் தேதி காலை பட்டாசு தயாரிப்பு வேலையில் ஈடுபட்டு வந்தார். தயாரிப்பு கூடத்தின் மற்றொரு பகுதியில் கிடங்கும் உள்ளது. காலை 10 மணியளவில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதில் முருகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பலத்த தீக்காயம் அடைந்த ராஜேந்திரன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீக்காய தடுப்புப்பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதன்மூலம் சாவு எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
சட்ட விரோதமாக பட்டாசு ஆலை நடத்திய ரஷீத் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆத்தூர் கோட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.