சேலத்தில் திடீரென்று மிலிட்டரி கேண்டீனுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டதால், முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
சேலம் கொண்டலாம்பட்டியில் முன்னாள் படைவீரர்களுக்கான மிலிட்டரி கேண்டீன் இயங்கி வருகிறது. இந்த கேண்டீனில் மேலாளராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அதிகாரிகள், கடந்த 15 நாள்களுக்கு முன், அந்த கேண்டீனை பூட்டி சீல் வைத்தனர்.
முறைகேடு புகார்கள் மீது விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த சிறப்புக்குழுவும் விசாரணை நடத்தியது. இதில் கேண்டீனில் முறைகேடுகள் எதுவும் இல்லை எனத் தெரியவந்ததை அடுத்து, கடந்த 22ம் தேதி மீண்டும் கேண்டீன் திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் இந்த கேண்டீனில் வழக்கம்போல் தங்கள் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருள்கள், மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில், வீட்டுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் மதுபானங்களை வாங்குவதற்காக 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர் இன்று காலை 5 மணி முதலே கேண்டீன் முன்பு கூடினர். காலை 9 மணிக்கு கேண்டீன் திறக்கப்பட்டது.
வழக்கம்போல் முதலில் வந்த 150 பேருக்கு மட்டும் பொருள்கள் வழங்க பயோமெட்ரிக் முறைப்படி டோக்கன் வழங்கப்பட்டது. அப்போது முன்னாள் படை வீரர்கள் முண்டியடித்ததால், அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கேண்டீன் மேலாளர் கிருஷ்ணனிடம் தகராறு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் பிரபாகரன், நிகழ்விடம் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தார். அவரிடமும் முன்னாள் படைவீரர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனால் விரக்தி அடைந்த அவர் திடீரென்று, மிலிட்டரி கேண்டீனை பூட்டி சீல் வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்று விட்டார்.
இதை கொஞ்சமும் எதிர்பாராத முன்னாள் படை வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் கேண்டீனை திறக்குமாறு அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும், முறைகேடு புகாரில் சிக்கிய கிருஷ்ணனை வேறு இடத்திற்கு மாற்றவும் வற்புறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்தனர். ஆனாலும், முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தரையிலேயே அமர்ந்து இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் பிரபாகரனிடம் கேட்டபோது, ''மிலிட்டரி கேண்டீனில் இன்று பொருள்கள் வாங்க வந்தவர்களில் சிலர் தகராறில் ஈடுபட்டனர். எவ்வளவோ பேசிப்பார்த்தும் யாரும் சமாதானம் ஆகவில்லை. அதனால்தான் உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில், அந்த கேண்டீன் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஒரு நாளைக்கு 150 பேருக்கு மட்டுமே பொருள்கள் வழங்கப்படும். வேறு சில கேண்டீன்களில் போதிய அளவில் மதுபானங்கள் இருப்பு இல்லாததால், இந்த கேண்டீனில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. இனி உரிய பாதுகாப்புடன் பொருள்கள் தொடர்ந்து வழங்கப்படும்,'' என்றார்.