தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடியைச் சேர்ந்தவர் பழனி செல்வம். இவர் அதே ஊரில் புல்லட் மரகதம் அக்ரோ ப்ராடக்ட் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். இதன் மூலம் நவதானிய வியாபாரம் செய்துவருகிறார். கடந்த சுமார் ஆறு ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள அக்கம்பக்கம் ஊர்களில் இருந்து விவசாயிகளிடம் வேர்க்கடலை வாங்கி சின்ன சேலம் நகரில் இயங்கிவரும் சரண்யா கடலை ஆயில் மில்லிடம் விற்பனை செய்து, பணம் பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில், ஆயில் மில் உரிமையாளரான பெரியசாமி, பழனி செல்வத்திற்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய். இந்தப் பாக்கித் தொகையில் 45 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார்.
இன்னும் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் தர வேண்டிய நிலையில், 70 லட்ச ரூபாய்க்கு காசோலை கொடுத்துள்ளார் பெரியசாமி. ஆனால் அவர் கொடுத்த காசோலையை வங்கியில் கொடுத்துப் பணமாக மாற்ற முயற்சி செய்தபோது வங்கியில் பெரியசாமி பெயரில் பணம் இல்லை என காசோலை திரும்பிவந்துவிட்டது. இதனையடுத்து பழனி செல்வம் கடந்த மாதம் 12ஆம் தேதி ஆயில் மில்லுக்குச் சென்று பெரியசாமியிடம் தனக்குத் தர வேண்டிய ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் பணத்தைத் தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆயில் மில் உரிமையாளர் பெரியசாமி, பழனி செல்வம், அவரது மனைவி தங்கம், மகன் பாலுசாமி மற்றும் இருவர் உட்பட 5 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். இது சம்பந்தமாக பழனி செல்வம் நேற்று (08.07.2021) சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் பெரியசாமி, தங்கம், பாலுசாமி உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.