/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3913.jpg)
மக்கள் நல பணியாளர் திட்டம் தொடர வேண்டும். ஆட்சிகள் மாறினாலும், மக்கள் நலப் பணியாளர் திட்டம் தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 1990ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி, 13,000 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 1991ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி 13,000 மக்கள் நலப் பணியாளர்களையும் வேலையில் இருந்து நீக்கியது. மீண்டும் 1996ம் ஆண்டு ஆட்சி அமைத்த கலைஞர், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்தினார். தொடர்ந்து 2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் அவர்களை பணியிலிருந்து நீக்கினார். 2006ல் ஆட்சிக்குவந்த கலைஞர் மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கினார். இதன் பின் 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் அவர்களை பணியிலிருந்து நீக்கினார்.
ஜெயலலிதா அரசின் நடவடிக்கை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், 2014ம் ஆண்டு மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால், அன்றைய அதிமுக அரசு இந்த வழக்கு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்பட்டு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள் என சட்டமன்றத்தில் அறிவித்தார். இதுப்பற்றி சட்டமன்றத்தில் அவர் பேசும்போது, “ ‛‛மக்கள் நலப்பணியாளர்களை அதிமுக அரசு நீக்கம் செய்தது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7,500 ரூபாய் வழங்கப்படும்'' என அறிவித்தார். இதையடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணியில் இணைந்தனர்.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் மக்கள் நலப் பணியாளர் வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மக்கள் நலப் பணியாளர்கள் திட்டம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போல் மக்கள் நலப் பணியாளர் திட்டமும் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)