கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக, 12 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த மாநிலத்தில் ஏற்கனவே, கரோனா பரவும் நிலையில் நிபா வைரஸால் சிறுவன் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே, மத்திய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் குழு கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்குழு கேரள அரசுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவு, பொது சுகாதார நடவடிக்கைக்கு உதவும்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நிபா வைரஸ் தொடர்பான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிபா வைரஸ் வௌவால்கள், பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும். சுகாதாரமற்ற உணவுகளாலும் நிபா வைரஸ் மனிதர்களிடம் நேரடியாக பரவும். நிபா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசியோ, உரிய சிகிச்சை முறைகளோ இதுவரை இல்லை. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வாந்தி, தொண்டை புண் போன்றவை நிபா காய்ச்சல் அறிகுறிகளாகும். பழந்தின்னி வௌவாலால் நிபா வைரஸ் பரவும் என்பதால் பழங்களை நன்றாக சுத்தம் செய்து உண்ண வேண்டும். பன்றிகள் வளர்க்கப்படும் பண்ணைகளில் சுகாதாரம் பேணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.