நீலகிரி மாவட்டத்தை புரட்டிப் போட்டது கனமழை. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பல கிராமங்களில் உள்ள மக்களின் நிலை அறியமுடயவில்லை. அவர்களுக்கு உணவு கிடைக்கிறதா என்பதும் கேள்விக்குறி தான்.
ஆனாலும் தன்னார்வ இளைஞர்கள் குழுக்களை அமைத்து நிவாரணப் பணிகளுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்கள். முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல நினைத்தால் அங்கே வீடுகள் இருந்த தடயமே இல்லை என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் தன்னார்வ இளைஞர் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை அடையாளங்கண்டு நிவாரணங்கள் கிடைக்கச் செய்து வருகிறார்கள். பல்வேறு வெளியூர்களில் வேலைக்காக சென்ற நீலகிரி மாவட்ட இளைஞர்கள் திரும்பி வந்து மீட்புப்பணி மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் ஒவேலி அருகில உள்ள எல்லைமலை கிராமத்தைச் சேர்ந்த சைமுதீன் என்பவர் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்டு தங்கும் முகாம்களுக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குச் சென்ற போது 50 அடி உயரத்திலிருந்து மண்சரிவு ஏற்பட்டு புதைந்துள்ளார்.
கடந்த 5 நாட்களாக அவரைத் தேடும் பணியில் வனத்துறை மற்றும் அதிகாரிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். பொக்கலின் மூலம் மண்ணை தள்ளி தொடர்ந்து தேடி வருகின்றனர். ஆனால் அந்தப் பகுதிக்கு வரும் அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மாற்று இயந்திரங்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சைமூதீனுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் வெளியூர்களில் இருந்து நிவாரணங்களுடன் வரும் தன்னார்வலர்களுக்கு வழிகாட்ட சாலையில் எனனமாதிரியான வாகனங்கள் செல்லமுடியும்என்றும் துண்டிக்கப்பட்ட சாலைகள் பற்றிய வரைபடங்களையும் அனுப்பியுள்ளனர். மேலும் மறுபடியும் மழை பெய்யும் என்ற தகவலால் மக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் அவலாஞ்சி சுற்றியுள்ள பல கிராமங்கள் முழுபாதிப்பில் இருந்தாலும் எந்த உதவியும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் . தன்னார்வலர்கள் உதவ சென்றால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர் குழுவைச் சேர்ந்த ஆனந்த் 9527119747 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் வழிகாட்டவும் அழைத்துச் செல்லவும் தயாராக உள்ளார்.