உத்திர பிரதேச மாநிலத்தில் யோகி தலைமையிலான பாஜக அரசு பொறுப்புக்கு வந்து ஒரு வருட காலத்திற்கு மேலாகிறது. இந்த காலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாமல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணமடைந்தது நாட்டையே உலுக்கியது. மேலும் இஸ்லாமியர்கள் மீது வழக்கு என நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒரு வருட கால ஆட்சியில் எந்த விதமான மதக்கலவரங்களும் நடைபெறவில்லை என்று யோகி சொன்னாலும் மத்திய உள்துறை பாராளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் உத்திர பிரதேச மாநிலம் மதக்கலவரத்தில் முன்னிலையில் இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு நடந்த கலவரங்களில் 44 பேர் உயிரிழந்தும் 540 பேர் காயமடைந்தும் இருக்கிறார்கள். அதற்கு முந்தைய ஆண்டு 29 பேர் உயிரிழந்தும் 490 பேர் காயமடைந்தும் இருக்கிறார்கள். புலண்ட்சாகர் ,ஷர்ன்பூர் ஆகிய இடங்களில் நடந்த கலவரங்களில் யோகி வழிநடத்தக்கூடிய ஹிந்து யுவா வாகினி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பாஜகவினர் கலவரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி யோகி அரசு வெளியிட்ட செய்தியில் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர 160 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டனர். 10 மாதங்களில் 1200 போலீஸ் என்கவுன்ட்டர்கள் நடந்து இருக்கிறது. அந்த மாநிலத்தில் பீம் ஆர்மி அமைப்பின் சந்திரசேகர் ஆசாத் 2017 மே மாதம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டார். இந்து அமைப்புகள் மீதான குற்றசாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தாலும் இஸ்லாமியர்கள் மீது வழக்குகள் பாய்ந்திருக்கிறது. செஷன்ஸ் நீதிமன்றங்களில் வழக்குகளில் ஜாமீன் கிடைந்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மீண்டும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஹிந்து யுவா வாகினி , ஹிந்து சாம்ராஜ் பார்ட்டி, அகில் பாரதிய ஹிந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புகள் கலவரங்களுக்கு காரணமாக இருந்தும் கூட இஸ்லாமியர் மீது தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகள் பாய்ந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்துக்களின் ஓட்டுகளை பெறவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகிறது.
1980 களில் உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டமானது பதுக்கல் வியாபாரிகள், கொள்ளையர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது அரசியல் லாபத்திற்காக உ.பி –யில் இஸ்லாமிய மக்களின் மீது எந்த விதமான தயக்கமும் இன்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது.