
தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவைத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தமிழகத்தில் 10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தை கனகராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பிரகாஷ்- புகழேந்தி அமர்வு முன் இன்று (03/06/2020) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 'தேர்வை தள்ளிப்போடுவது பள்ளி மாணவர்களுக்கான மன அழுத்தத்தை அதிகரிக்கும். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரச்சனையின் தன்மையை அறிந்தே தமிழக அரசு தேர்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கும். தமிழக அரசின் தேர்வு நடத்தும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது' எனக் கூறி பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.