ராசிபுரம் அருகே, புதிய ஆண் நண்பருடனான தொடர்பைத் துண்டிக்கச் சொல்லி வற்புறுத்தியதால் பழைய ஆண் நண்பரை, புதிய நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொல்ல முயன்ற பெண் உள்பட இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே தட்சன்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர், அதே பகுதியில் உள்ள ஒரு சேகோ ஆலையில் வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி காவியா (33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக காவியா, கணவரைப் பிரிந்து தனியாக வசிக்கிறார். இந்நிலையில், அதே ஆலையில் பணியாற்றிவரும் கணேஷ் (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் காவியாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக குடும்பம் நடத்திவருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த காவியாவின் உறவுக்காரரான குமார் (40) என்பவர் காவியா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதில் அவர்கள் இருவரிடையே நெருக்கம் அதிகமானது. ஒரு கட்டத்தில், ஈரோட்டில் உள்ள வீட்டைக் காலி செய்துவிட்டு, காவியா வீட்டுக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவிட்டார்.
குமாருடன் நெருக்கம் ஏற்பட்டதை அடுத்து, கணேஷுடன் பழகுவதை காவியா தவிர்த்துவந்தார். இது தொடர்பாக கணேஷ் கேட்டபோது, குமாரை தனது உறவினர் என்றும், தொழில் தொடர்பாக இந்த ஊரில் தங்கியிருக்கிறார் என்றும், அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், டிசம்பர் 15ஆம் தேதியன்று காவியாவை தேடிச்சென்ற கணேஷ், அங்கு அவரும் குமாரும் ஒன்றாக நெருக்கமாக இருந்ததைப் பார்த்துவிட்டார். ஆத்திரமடைந்த அவர், காவியாவிடம் தகராறு செய்தார். இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இனியும் கணேஷை விட்டுவைத்திருந்தால் நிம்மதியாக இருக்கவிட மாட்டார் என்று கருதிய காவியா, புதிய ஆண் நண்பரான குமாருடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த 15ஆம் தேதியன்று வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டிருந்த கணேஷ் மீது குமாரும், காவியாவும் வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்தனர்.
உடலில் தீப்பிடித்ததால் அலறித்துடித்த கணேஷ், அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டார். ஆனால் அதற்குள் அவருடைய உடல் முழுவதும் தீ பரவி, பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த வெண்ணந்தூர் காவல் நிலைய காவல்துறையினர், காவியா, குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.