வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் பாஷா. பெயிண்ட் கடை வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல ரவுடியான வசூர்.ராஜா பேசுவதாகச் சொல்லி செல்போன் வழியாக மிரட்டி 3 லட்சம் பணம் கேட்டுள்ளார், அப்போது ஒரு லட்சம் தந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அடிக்கடி பணம் கேட்டு மிரட்டிவந்துள்ளார்.
ஜூன் 27ஆம் தேதி பாஷா மற்றும் அவரது கடை ஊழியர் சலீம் இருவரும் காரில் சென்றுகொண்டு இருந்தபோது இவர்களது காரை மற்றொரு கார் மடக்கி நிறுத்தியதாம். உள்ளேயிருந்து இறங்கிய ரவுடி வசூர்.ராஜா, ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவரும் பாட்ஷா மற்றும் சலிமை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, ‘நாளை உன் கடைக்கு வருவேன் 5 லட்சம் பணத்தை தயார் செய்துவை, இல்லையெனில் உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன்’ என மிரட்டி விட்டு, காரில் வைத்திருந்த 20,000 ரூபாய் ரொக்க பணத்தை பறித்துக் கொண்டு சென்றதாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.
யாரிந்த ரவுடி ராஜா?
காஞ்சிபுரத்தைக் கலக்கிய கொள்ளையன் கொர.கிருஷ்ணன். இவரது டீமில் வேலூரைச் சேர்ந்த சூர்யா, மகாலிங்கம் ஆகிய இருவர் இருந்தனர். 2006ஆம் ஆண்டு கொர.கிருஷ்ணன் போலீஸாரால் என்கௌண்டர் செய்யப்பட்டார். கிருஷ்ணனின் சிஷ்யர்கள் தங்களது ஊருக்கு வந்து, சாலையோர கடைகளில் மாமூல் வாங்குவது, சட்டவிரோத வேலைகள் செய்பவர்களிடம் மாத மாமூல், கட்டப்பஞ்சாயத்து என வளர்ந்து ஆள்கடத்தல், அடிதடி, மிரட்டல், உச்சமாகக் கொலை என சூர்யாவும், மகா என்கிற மகாலிங்கமும் ரவுடிகளாக வளர்ந்தனர்.
ஒரு கட்டத்தில் இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டது. சூர்யாவை மகாலிங்கம் போட்டுத்தள்ளும் வரை அதிமுகவைச் சேர்ந்த ஜி.ஜி.ரவி என்கிற ரவுடி இருந்தார். சூர்யா, அவரது தம்பி சங்கர் இருவரையும் மகா டீம் கொலை செய்தது. இதன்பின் மகாவுக்கும் – ஜி.ஜி.ரவிக்கும் முட்டிக்கொண்டது.
தனது சட்டவிரோத தொழிலுக்குப் பாதுகாப்பு வேண்டுமென கொலை செய்யப்பட்ட ரவுடி சூர்யாவின் டீமில் இருந்தவரும், அவரது நண்பனுமான ரவுடி வசூர் ராஜாவுக்கு சப்போர்ட் செய்தார் ஜி.ஜி.ரவி. ரவுடி மகாவைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டார் ரவுடி வசூர்.ராஜா. இதனால் அடுத்தடுத்து கொலைகள் நடந்ததே தவிர மகாவைக் கொலை செய்ய முடியவில்லை.
வசூர் ராஜாவுக்கு உதவுவதால் கோபமான மகா டீம், ஜி.ஜி.ஆர் தம்பி ரமேஷ்சை கொலை செய்தது. கடைசியாக ஜி.ஜி.ரவியை கொல்ல முயற்சித்தபோது மகாலிங்கம் சிக்கிக்கொண்டார். ரவியின் மகன்கள், ரவுடி மகாவை சாலையில் பொதுமக்கள் முன்னிலையிலேயே வைத்துக் கொலை செய்தனர். கொலை செய்யப்பட்ட ரவுடி மகாவின் கூட்டாளி ரவுடி குப்பன், ப்ளான் போட்டு அதிமுக பிரமுகர் ஜி.ஜி.ரவியை கொலை செய்தார். அந்த வழக்கில் குப்பன் சிறைக்கு சென்றுவிட்டார்.
வேலூரின் தனிக்காட்டு ராஜாவாக கேங்க்ஸ்டாராக மாறினார் வசூர்.ராஜா. வேலூரில் தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் வாங்குவது, கட்டப்பஞ்சாயத்து, கூலிக்கு கொலை செய்வது என வளர்ந்தவர், தனது டீமில் படிக்காத, ஹீரோயிசத்துக்கு ஆசைப்படும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து மது, மாது, பணம் என சப்ளை செய்து அவர்களைத் தனது காரியத்துக்கு பயன்படுத்திக்கொண்டு வந்தார்.
2019ல் மதுரை சுங்கச்சாவடியில் பணம் தராமல் தகராறு செய்தபோது துப்பாக்கி காட்டி மிரட்டிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர்தான் இவர் தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளுடன் நெட்ஒர்க் வைத்துள்ளார் என்பதை போலீஸார் கண்டறிந்தனர். அவர்மீது கர்நாடகா மாநிலத்திலும் கொலை வழக்குகள் பதிவாகி இருந்தது. கர்நாடகா போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து ஜாமீனில் வெளியே வந்தவரை மீண்டும் சேலம் ஆத்தூர் போலீஸார் கைது செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தவர் தலைமறைவானார்.
தலைமறைவாக இருந்தபடி செல்போன் வழியாக தொழிலதிபர்களைக் கொலை செய்துவிடுவேன், குழந்தைகளைக் கடத்திவிடுவேன் என மிரட்டி பணம் வாங்கிக்கொண்டு இருந்தார். பல தொழிலதிபர்கள் சத்தமில்லாமல் பணம் தந்துள்ளனர். இதெல்லாம் போலீஸாருக்கு தெரிந்தும் காவல்துறையில் உள்ள அவரின் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வழியாக தகவல் வாங்கி தப்பியபடி இருந்து வந்தார்.
கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், பணம்கேட்டு மிரட்டல், சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது என சுமார் 50 வழக்குகள் அவர் மீது உள்ளன. 8 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர். அவரை வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு கண்காணித்துக்கொண்டே இருந்தது.
இந்த வசூர்.ராஜாவை கைது செய்ய வேலூர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். எஸ்.பி. தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி வசூர். ராஜா மற்றும் அவரது கூட்டாளி வெங்கடேசன் ஆகிய இருவரைக் கைது செய்தனர். தொழிலதிபர் பாஷாவிடம் புகார் வாங்கி எப்.ஐ.ஆர் போட்டனர்.
போலீஸ் கைது செய்தபின்பும் தெனாவட்டாக இருந்த வசூர். ராஜா பாத்ரூமில் வழுக்கி விழ, கையில் மாவு கட்டு போட்டுள்ளது போலீஸ். பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையில் மாவு கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறை வசூர். ராஜாவை வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளதாக ஜூலை 28ஆம் தேதி செய்தி குறிப்பு வெளியிட்டது.