ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.
எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.
அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.