தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை பாஜக என்ற வகையிலும், அரசியல் எதிரி திமுக என்ற வகையிலும் பேசி இருந்தார். மேலும், விஜய் தன்னுடைய உரையில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று கூறியிருந்தார்.
இதனை எதிர்த்து விஜய்க்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் த.வெ.கவினரும், நா.த.கவினரும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் திமுகவில் சிலரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் த.வெ.க.வினர் 2026 சட்ட மன்ற தேர்தலுக்கு தற்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர். பொதுச்செயலாளர் என். ஆனந்த தலைமையில் தொடர் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அடுத்தடுத்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் த.வெ.க.வில் 100 மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த இரண்டு மாதங்களில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 28 சார்பு அணி நிர்வாகிகளையும் விஜய் நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் தற்போது அவரது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.