சென்னை துரைப்பாக்கம், பெரும்பாக்கத்தில், அடிப்படை வசதிகள் இல்லை. எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒரு வழக்கறிஞர் ஆணையத்தினை நியமித்து இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் ஆணையரும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அதோடு இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் குழு ஆணையமும் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “கஞ்சா போன்ற போதைப் பொருள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கிறது. மாணவர்கள் மத்தியில் புழங்கும் இந்த போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த அதிகளவில் போலீசார்களை நியமிக்க வேண்டும். இது தொடர்பாக முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை செயலாளருக்கும், மாநிலத் தலைமை காவல் இயக்குநருக்கும் (DGP) உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து டிஜிபி பதில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதையில்லா தமிழ்நாடு செயலி தொடங்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் (15.11.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அண்டை மாநிலங்களில் இருந்து கொரியர் மூலமாக போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைகிறது. அது மட்டுமில்லாமல் வேலூர் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள தாலுகாக்களில் போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நோட்டு புத்தகங்களை விற்பனை செய்யக்கூடிய ஸ்டேஷனரி கடைகளைத் தவிர வேறு எந்த பெட்டிக்கடைகளையும் அமைக்க அனுமதிக்கக் கூடாது. இதனை முழுமையாகக் காவல் துறை கட்டுப்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.
போதைப் பொருட்களை கட்டுப்படுத்தக்கூடிய காவல்துறை அதிகாரிகளை மேற்பார்வையிட வேண்டும். இதற்காக, அதிகாரி ஒருவரையும், சிபிஐ அதிகாரி ஒருவரையும் நியமித்து, அதன்படி சிறப்புக் குழுவை நியமித்துக் கண்காணிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த சிறப்பு கண்காணிப்புக் குழுவில் யார் யார் இடம் பெறப் போகிறார்கள், எந்த அதிகாரி இடம் பெறுவார் என்ற விவரங்களை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.