உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் குடிப்பழக்கத்தை மறைத்து திருமணம் செய்துகொள்ளவிருந்த பையனுக்குக் கொடுத்த கவுன்சிலிங்கைப் பற்றி விவரிக்கிறார்.
ஒரு அம்மா தன் மகனுக்கு ஒரு மாதத்தில் திருமணம் இருக்கிறது. ஆனால் மகன் போதை குடிப்பழக்கத்திலிருக்கிறான் அவனை எப்படியாவது திருமணம் நடப்பதற்குள் திருத்திவிடுங்கள் என்றார். பின்பு அந்த அம்மாவிடம் மகன் குடிப் பழக்கத்தில் இருக்கும்போது திருமணம் நிச்சயம் செய்தது தவறில்லை? என்று கேட்டேன். அதற்கு எப்போதாவது தன் மகன் குடிப்பார் என்று ஒப்புக்கொண்டார். இது தப்பில்லையா என்று கேட்டேன். அதற்கு அந்த அம்மா, மகன் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணிடம் மகன் குடிப்பதைப் பற்றித் தெரிவித்துவிட்டான் என்று கூறி அந்த பெண் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததாகவும் சொன்னார். அதற்கு நான் அந்த பெண் சம்மதம் தெரிவித்தாள் உங்களுக்கு அறிவு எங்கு போனது என்று கேட்டேன். உடனே அந்த அம்மா அமைதியாக இருந்தார்.
அந்த பையனிடம் எத்தனை ஆண்டுகளாகக் குடிப்பழக்கம் உங்களுக்கு இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவன் 5 வருடம் குடிக்கின்றேன். ஆனால் எப்போதாவது தான் குடிப்பேன் என்று கூறினான். அதன் பின்பு எந்தளவு குடிப்பாய் என்றேன். இரவு உட்கார்ந்தால் குடித்துக்கொண்டே இருப்பேன் என்றான். அப்படிக் குடிப்பவர்களுக்குப் பெயர் என்ன? என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே இருந்தான். அருகிலிருந்த அந்த அம்மாவுக்கு புரியவில்லை. அதன் பிறகு அந்த பையன் சிரித்து முடித்துவிட்டு தான் தினமும் குடிப்பதை ஒப்புக்கொண்டான். பின்பு அந்த அம்மாவிடம் உங்களுக்கு ஒரு பெண் இருந்தால் இப்படி ஒரு பையனைத் திருமணம் செய்து வைப்பீர்களா? என்று கேட்க, இல்லை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி திருமணம் செய்தால் தன் மகன் திருந்திவிடுவான் என்றார். அதற்கு நான் இதுபோன்ற மனநிலையில் இருந்துகொண்டு மகன் திருந்தவில்லையென்றால் கவுன்சிலிங் கொடுத்த என்னையும் அடுத்து திருமணம் செய்துகொண்ட அந்த பெண்ணையும் கடைசியாகத் தவறு சொல்வீர்கள். ஆனால் பெற்றோராகிய நீங்கள் மகனைத் திருத்துவதில் முயற்சிக்க மாட்டீர்களா? என்றதும் அந்த அம்மா பேசவே இல்லை.
அதன் பிறகு கவுன்சிலிங் கொடுப்பதற்கு முன்பு ஒரு கண்டிசன் போட்டேன். பையன் திருந்திய பிறகு திருமணத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி அதற்குத் தயாராக இருக்கிறீர்களா? என்றேன். அதோடு சம்பந்தி வீட்டிலும் உண்மையைச் சொல்லுங்கள் அப்போதுதான் கவுன்சிலிங் கொடுப்பேன் இல்லையென்றால் நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம் என்றேன். ஏனென்றால் ஒரு மாதங்களில் குடிப் பழக்கத்தை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான விஷயம். ஒரு வேளை நான் அந்த கண்டீசன் போடாமல் கவுன்சிலிங் கொடுக்க நினைத்தால் தவறுக்கு உடந்தையாக இருப்பது போல் எனக்குத் தோன்றியது. பெண் வீட்டாரிடம் அந்த பையனின் குடும்பம் குடிப்பழக்கம் இருப்பதைச் சொல்லாமல் கூட இருந்திருக்கலாம். அதனால் உண்மையைப் பெண் வீட்டாரிடம் கூறிய பிறகு கவுன்சிலிங் வர வேண்டும் என்று கூறிவிட்டேன்.
அதைத் தொடர்ந்து அந்த பையனின் குடும்பம் உண்மையை பெண் வீட்டாரிடம் சொல்லிய பிறகு அந்த பையன் கவுன்சிலிங் வந்தான். பின்பு சொன்னதைக் கேட்டுத் தொடர்ந்து தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றி அந்த பையன் என்னிடம் கவுன்சிலிங் பெற்று வந்தான். அதோடு போதை மறுவாழ்வு மையத்திற்கும் சென்று குடிப்பழக்கத்தை விடப் பயிற்சி பெற்று வந்தான். அந்த பையனின் ஒத்துழைப்பால் 8 செசன்கள் கவுன்சிலிங் பெற்று தற்போது முழுவதுமாக குடிப் பழக்கத்தைவிட்டுத் திருந்தி வாழ்கிறான். அந்த பையனின் குடும்பம் எனக்குத் தெரிந்த வட்டாரங்களில் இருந்ததால் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டான். அதன் பிறகு அந்த பையனின் திருமணத்தில் அவனின் மனைவி என்னிடம் நன்றி கூறினாள். இந்த கவுன்சிலிங் பொறுத்தவரை எடுத்ததும் உங்கள் மகனின் குடிப்பழக்கத்தை நிறுத்தி விடலாம் என்று சொல்வதைக் காட்டிலும் எனக்கு சில சமூகப் பொறுப்புகள் இருப்பதை உணர்ந்தேன்.
இது போல நிறைய இடங்களில் பெற்றோர்கள் பெண் வீட்டாரை ஏமாற்றி தங்களது மகனுக்கு இருக்கும் போதைப் பழக்கங்களை மறைத்து திருமணம் செய்து வைப்பது சீட்டிங் என்று தான் கூறமுடியும். அதனால் முதலில் உண்மை இன்னதென்று பெண் வீட்டாரிடம் கூறி அவர்களிடம் சம்மதம் பெற்று, திருந்தக் கால அவகாசம் கேட்டு திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது. திருந்த கால அவகாசம் கேட்பதில் எந்தவித தவறுமில்லை. ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லும் அந்த டயலாக்கில் எனக்கு உடன்பாடு இல்லை என்றார்.