
திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி, திருச்சி மாவட்ட (எஸ் பி) காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.
அந்த வகையில் இருமாவட்ட மற்றும் மாநகர போலீஸார் இணைந்து "ஆபரசேன் அகழி' என்ற பெயரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையில் மொத்தம் 825 போலீஸார், சரித்திர பதிவு குற்றவாளிகள் மட்டுமின்றி, நில அபகரிப்பு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகச் சந்தேகப்படும் நபர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர். அதில், பிரபு என்கிற பப்லு, ஜெயக்குமார் என்கிற கொட்டப்பட்டு ஜெய், மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டரை சுரேஷ், டேவிட் சகாயராஜ், பாது என்ற பாலமுத்து, பிரதாப் என்கிற சிங்கம் பிரதாப், ராஜகுமார், கருப்பையா, பாதுஷா என்கிற பல்பு பாட்ஷா , கரிகாலன், கோபாலகிருஷணன் என்கிற தாடி கோபால், சந்திரமௌலி, குருமூர்த்தி, டி.டி.கிருஷ்ணன் ஆகிய 14 பேரின் விபரங்களைச் சேகரித்து அவர்களின் வீடுகளில் வியாழக்கிழமை(19.9.2024) மாலை முதல் வெள்ளிக்கிழமை(20.9.2024) மாலை வரை 24 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் அவர்களுக்கு தொடர்பில்லாத வகையில், பிற நபர்களின் அதாவது 258 சொத்து ஆவணங்களும், 68 வங்கிக் கணக்கு புத்தகங்களும், 75 புரோ நோட்டுகளும், 82 நிரப்பப்படாத காசோலைகளும், 18 கைப்பேசிகளும், 84 சிம் கார்டுகளும் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இச்சோதனையில் இந்திய ஜனநாயக கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வரும் மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டரை சுரேஷ் என்ற ரௌடியின் வீட்டில் இருந்து கணக்கில் வராத 66 அசல் பத்திரங்களும், புதுச்சேரி மது வகைகள் 31 பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. இவை சட்டவிரோதமாக நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகள் மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டிப் பெறப்பட்டவை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. தப்பியோடி சுரேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது:

வியாழக்கிழமை இரவு நடத்திய சோதனையின் போது திருச்சி, எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த சந்திரமவுலி என்பவரது வீட்டில் சோதனை செய்யும் முன்பே அவர் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனையும் நடந்தது. இதில் வாத்தலை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட முக்கொம்பு நடுக்கரை, எல்லீஸ் சோதனை சாவடியில் நடந்த வாகன சோதனையில், அந்த வழியாக வந்த காரை நிறுத்த முற்பட்டபோது அந்த கார் முக்கொம்பு நடுகரை எல்லீஸ் பூங்கா சுவரில் மோதியது. பின்னர் காரில் இருந்த ஒருவர் சிக்கினார் மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில் காரிலிருந்தது எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த சந்திரமௌலி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை வாத்தலை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் காரின் உள்ளே அரிவாள், 2 வாள்கள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது. அவற்றையும் காரையும் போலீஸார் கைப்பற்றினர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொருளாளராக முன்பு பதவி வகித்தவர் எனவும், எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி எனவும், காரில் இருந்து தப்பி ஓடிய 2 பேரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் எனவும் தெரியவந்தது. பின்னர் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருச்சி எஸ் பி எச்சரிக்கை:
இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் கூறியிருப்பது, ஆபரசேன் அகழி சோதனைக்காக 3 பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு, முதல் பட்டியலில் உள்ள நபர்கள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 2 பட்டியலில் உள்ள நபர்கள் விரைவில் சோதனை செய்யப்படுவார்கள். மேலும், இந்த தேடுதல் வேட்டையின் போது நில அபகரிப்பு தொடர்பான அதிக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்த நபர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில், நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப் பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைப்பேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ, வீடியோ, கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளின் ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் எனவும், திருச்சி மாவட்ட காவல் உதவி எண்ணில் ( 97874 64651) தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.