திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், புதிய திட்டப் பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகின்ற 2024-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பாக, பச்சரிசி 1 கிலோ (மதிப்பு - ரூ. 35.20), சர்க்கரை ஒரு கிலோ (மதிப்பு ரூ. 40.61), கரும்பு ஒன்று (மதிப்பு ரூ. 33.00) என மொத்தம் மதிப்பு ரூ.108.81 மற்றும் ரொக்கம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆக ஒரு பரிசுத் தொகுப்பின் மொத்த மதிப்பு ரூ.1108.81 ஆகும். தமிழகம் முழுவதும், 2,14,30,587 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.2,376.22 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 6,79,414 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.75.33 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் 1004 நியாய விலைக் கடைகளில் 6,46,259 குடும்ப அட்டைதாரர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 19 நியாய விலைக் கடைகளில் 22,572 குடும்ப அட்டைதாரர்கள், மகளிர் சுய உதவிக்குழு 12 நியாய விலைக் கடைகளில் 10,705 குடும்ப அட்டைதாரர்கள் என 1035 நியாய விலைக் கடைகளின் மூலமாக மொத்தம் 6,79,414 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இன்றைய தினம் பொருளூர் ஊராட்சி, மரிச்சிலம்பு ஊராட்சியில் பூணம்பட்டி, புளியம்பட்டி ஊராட்சியில் புளியம்பட்டி, தும்பலப்பட்டி ஊராட்சியில் தும்பலப்பட்டி, தொப்பம்பட்டி ஊராட்சியில் தொப்பம்பட்டி, கீரனூர் பேரூராட்சியில் கீரனூர், மேல்கரைப்பட்டி ஊராட்சி மேல் கரைப்பட்டி, கோரிக்கடவு ஊராட்சியில் கோரிக்கடவு, அக்கரைப்பட்டி ஊராட்சியில் நரிக்கல்பட்டி, மானூர் ஊராட்சியில் மானூர் தாளையூத்து ஊராட்சியில் தாளையூத்து, புஷ்பத்தூர் ஊராட்சி புஷ்பத்தூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
பொருளூர் ஊராட்சி, பொருளூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வெள்ளத்தடுப்பணை, சிமெண்ட் சாலை, வண்ணக்கல், சிறுபாலம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டிற்கு தபாலில் குடும்ப அட்டை வந்து சேரும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற 30 மாதங்களில் இதுவரை சுமார் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குடிமைப் பொருட்களை பெறுவதற்காக நீண்ட தூரம் சென்று சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் அவர்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே குடிமைப் பொருட்களை பெற்று பயன்பெறும் வகையில், புதியதாக நியாய விலைக் கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
நியாய விலைக் கடைகளில் கை ரேகை பதிவு மூலம் பொருட்கள் பெறுவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க தற்போது கண் கருவிழி பதிவு மூலம் பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 36,000 நியாய விலைக் கடைகளில் கண்கருவிழி பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக 4 இலட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமிக்கும் வகையில் செமி குடோன்கள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
முருங்கை விவசாயிகளை மேம்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் முருங்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை கண்டறிந்து, ஊக்குவிக்கும் வகையில் சட்டமன்ற தொகுதிகள் தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. தொப்பம்பட்டியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமையவுள்ளது. அதேபோல் கேதையறும்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது” என்று கூறினார்.