உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை அழைத்து பிரியாணி விருந்து வைத்துள்ள சமூக ஆர்வலரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கரோனா காரணமாக உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினத்தை தொழிலாளர்கள் மிக எளிமையாகக் கொண்டாடினர். இந்த நிலையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் தொழிலாளர் தின வாழ்த்துகளை எளிமையாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் துபாய் நாட்டில் வசித்து வரும் நாகூரைச் சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளரும், சமூக ஆர்வலருமான ஷேக்தாவூத் மரைக்காயர் என்பவர் உழைப்பாளர் தினத்தில் நாகையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்குச் சிக்கன் பிரியாணி விருந்து வைக்க முடிவெடுத்தார். பின்பு இது குறித்து நண்பர்களிடம் ஆலோசித்த ஷேக்தாவூத், நண்பர்களின் உதவியுடன் துபாயில் இருந்தவாறே ஏற்பாடுகளைச் செய்து சிக்கன் பிரியாணி விருந்து வைத்து முடித்துள்ளார்.
தனியார் பள்ளியில் நேற்று (01/05/2020) நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் நாகை நகராட்சி ஆணையர் யேசுராஜ் பிரியாணியைத் துப்புரவு பணியாளர்களுக்கு பரிமாறி அனைவரையும் மகிழ்ச்சி பொங்கவைத்தார். அனைவரும் பிரியாணியைச் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இந்த விருந்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருந்தில் பங்கேற்ற அனைவரும் சமூக இடைவெளியுடன் அமர்ந்து உணவு அருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருந்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் கூறுகையில், "சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு வாய்க்கு ருசியா, மனசுக்கு நிறைவா சாப்பிட்டிருக்கோம். கரோனா எப்போ ஒழியும், எப்போ நிம்மதி வருமோ தெரியல" என்றனர்.