தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஆள்குறைப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தவகையில்தான் 5 மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற நிலையை மாற்றி 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளரை நியமிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். இதிலும் நிலை ஒன்று, நிலை இரண்டு என இரு பிரிவுகளாக பணி செய்து வந்தனர். ஆனால் அரசு பதவி உயர்வு இல்லை, நிலை ஒன்று மட்டுமே என்கிறது. இப்படி அடுத்தடுத்த உத்தரவுகளால் தடுமாறிய தஞ்சை மாவட்ட சுகாதார ஆய்வாளர் ஒருவர் மனமுடைந்து தூக்கமாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்று தற்போது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட துணை தலைவர்
த. அமுதவாணன் கூரியதாவது,
தமிழ்நாட்டில் 8000 க்கும் அதிகமான சுகாதார ஆய்வாளர்கள் தேவைப்படும் இடத்தில் 5700 பணி இடங்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அப்பணியிடங்கள் குறைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி இன்னும் 334 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் 04.09.2019 முதல் 10.09.2019 வரை கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு காட்டப்படுகிறது. சட்ட ரீதியான முறையில் மேல்முறையீடு செய்யவும் இந்த ஆணை திரும்ப பெறவும் வலியுறுத்தியுள்ளோம். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்பபாட்டம் நடைபெறுகிறது. செப்டம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் சென்னை இயக்குனர் அலுவலகத்தில் 48 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்தநிலையில்தான் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி (பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர்.) 2 ஆம் பகுதியில் பயிற்சி முடித்து 2014 ஆம் வருடம் பணியில் இணைந்தார். தஞ்சை மாவட்டம் , செருவாவிடுதி வட்டாரம் குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்தார். நேற்று மீண்டும் பணிக்கு திரும்பினார். பொருளாதார நிலையில் பின்தங்கிய அவர். அரசாணை 337 & 338 பற்றிய தகவலை அறிந்தவுடன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் சூழ்நிலையில் தனது குடும்ப எதிர் காலம் எப்படி அமையுமோ என்ற பயத்தில் இதுபோன்ற தவறான முடிவை எடுத்துள்ளார். தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். தொடர்ந்து அரசாங்கம் சுகாதார ஆய்வாளர்களை வஞ்சித்துகொண்டே இருக்கிறது. சுனாமி, கொள்ளை நோய், தானே புயல், கஜா புயல் இவை அனைத்திலும் எங்கள் பங்களிப்பு என்பது வார்த்தைகளால் சொல்ல கூடியதல்ல. அரசாணையை ரத்து செய்து மீண்டும் எங்கள் உரிமையை எங்களுக்கே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார்.