தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் கைதிகள் மூவர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2000-ஆவது ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால், சென்னை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அதையொட்டி, அதிமுகவினர் தமிழகம் முழுக்க கலவரங்களில் ஈடுபட்டார்கள். அப்போது கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் தருமபுரிக்குக் கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர். வன்முறையாளர்கள் அந்த மாணவிகள் சென்ற பேருந்துக்குத் தீ வைத்ததில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமா என மூன்று மாணவிகள் கொழுந்துவிட்டெரிந்த தீயில் கதறக்கதறக் கருகி மிகப் பரிதாபமான நிலையில் உயிரிழந்தனர். இந்தியாவின் ரத்தத்தையே உறைய வைத்தது இந்த கொடூரமான சோக நிகழ்வு.
இந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகர்கள் மாது, நெடுஞ்செழியன், முனியப்பன் என மூவருக்கும் எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்த தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. ஆயுள் தண்டனைக் கைதிகளாக அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்த மூவரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய கடந்த நவம்பர் மாதம் ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்நிலையில் இவர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் கைதிகள் மூவர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதாவது கொலை செய்யும் நோக்கில் அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என தலைமை வழக்கறிஞரும், தலைமை செயலரும் கூறினர். எனவே மூவரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனாலும் மீண்டும் இந்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி ஆளுநர் மாளிகை தமிழக அரசுக்கு பதிலளித்திருந்த நிலையில் மூவரையும் விடுதலை செய்ய மீண்டும் தமிழக அரசு பரிந்துரை செய்த நிலையில் அரசியலமைப்பு சட்டம் 161 படி மூவரையும் விடுதலை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.