தாய் காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மெரினாவில் 90 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி அய்யாகண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, மெரினாவில் அரசின் அனுமதியுடன் கடைசியாக எப்போது போராட்டம் நடந்தது என அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு போராட்டத்தை தவிர 2003-ம் ஆண்டிற்கு பின் மெரினாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை. அதற்கு முன் பாலகங்காதர திலக்கின் 150வது நினைவு தினத்தையொட்டிய நிகழ்ச்சிக்கு அரசு 1 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்ததாக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.
இதற்கு மனுதாரர் தரப்பில், கடந்த 2003-ம் ஆண்டு மெரினாவில் ஜெயலலிதாவின் படங்கள் எரிக்கப்பட்டதால் தான் அங்கு போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தாய் காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினார். மேலும் வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை தினங்களில் லட்சகணக்காண மக்கள் கோயில், தேவாலயங்களில் வழிபாடு செய்கின்றனர், அந்த கூட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை என கூறி மக்கள் அந்த பண்டிக்கைகளை கொண்டாடக் கூடாது என கூற முடியுமா எனவும் கேட்டார்.
மேலும், போராட்டங்களை ஒழங்கப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. போராட்டங்களை தடுக்க அரசுக்கு எந்த அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தார். மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சி குப்பம் கடற்கரையில் போராட்டம் நடத்த முடியுமா என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து நீதிபதி, வழக்கின் தீர்ப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வழங்கப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.