திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் சிறப்பே இங்கு பயிலும் மாணவ, மாணவிகளில் மாணவிகளுக்கே இங்கு முக்கியத்துவம். கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாணவிகளுக்கு 55 சதவிதம் ஒதுக்கப்படுகிறது, மாணவர்களுக்கு 45 சதவிதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அதற்கு காரணம், கிராமங்கள் நிறைந்த பகுதி, பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த கல்லூரி தொடங்கிய போதே விதிமுறைகள் வகுத்து வைத்து தற்போது வரை இந்த அரசு கலைக்கல்லூரியில் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த கல்வியாண்டு முதல் கல்விக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு என்பது 3 மடங்கு அதிகமாக உள்ளதால் மாணவ- மாணவிகள் அதிர்ச்சியாகினர்.
இந்த கட்டணத்தை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி மாணவ- மாணவிகள் சார்பாக பல்கலைகழக நிர்வாகத்துக்கு வேண்டுக்கோள் விடுத்தனர். அதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியான 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ- மாணவிகள் செப்டம்பர் 17ந்தேதி வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் செய்தனர். மறியல் செய்த மாணவ- மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உங்களின் கோரிக்கையை பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தருக்கு தெரியப்படுத்துகிறோம் எனச்சொல்லி வாக்குறுதி தந்ததன் விளைவாக சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தால் செய்யாரில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் இந்த கட்டண உயர்வை கண்டித்து அதன் கீழ் செயல்படும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பல அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடதக்கது.