Skip to main content

'பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்' - கமல்ஹாசன்!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

makkal needhi maiam party kamalhaasan statement

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும், பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்குப் பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

 

இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும்.

 

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாகக் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த 'மகாநதி'. இன்றும் அந்தப் பதட்டம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சினைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்.

 

இந்தப் பிரச்சினையைக் குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சினையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவுச் சமூகமாக நாம் அனைவருமே போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்