தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வட்டாட்சியர் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சின்ன செட்டி தெருவில் உள்ள கனகா அப்பார்ட்மெண்ட் மேல்தளத்தில் ஜியோ நிறுவனத்தின் 7 டன் எடைக்கு மேல் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகில் குடியிருப்பவர்கள் மற்றும் தெருக்களில் வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அந்த இடம் உறுதி தன்மைக்கு தகுதியான இடம் அல்ல என்றும் இந்தக் கட்டிடம் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றும் நகராட்சியில் இது குறித்து சரியான அனுமதி பெற வில்லை என்றும் பொது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதனை அறிந்த சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன் சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வலியுறுத்தினார். இதன்பேரில் ஆய்வு செய்த வட்டாட்சியர் எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் கட்டடத்தின் உரிமையாளர் ஆகியவர்களை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அடுத்தவாரம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறினார்.
இதனை ஏற்காத பொதுமக்கள் இது முக்கிய பிரச்சினை இன்றையோ நாளையோ அவர்களை அழையுங்கள். அதுவரைக்கும் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி வையுங்கள் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் வட்டாட்சியர் பணியை நிறுத்தாமல் சார் ஆட்சியரிடம் கூறுகிறேன் என மழுப்பலாக கூறி சென்றதால் அப்பகுதி பொதுமக்கள் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்த முயற்சித்தனர். அப்போது பிரச்சினை வரும் சூழ்நிலையில் கோபுரம் அமைக்கும் பணியில் இருந்த பணியாளர்கள் பணியை நிறுத்தி வெளியேறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்ய வந்த சிதம்பரம் நகராட்சி ஆய்வாளர் ஆரோக்கியப் பிரின்ஸ், அலுவலர் ராஜி ஆகியோர் இந்த கட்டிடம் இரண்டு தளத்திற்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டு அதற்கான வரி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மூன்று தளம் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கோபுரம் அமைக்கும் இடம் மூன்றாவது தளத்தில் தண்ணீர் தொட்டிக்கு மேல் அமைக்கப்படுகிறது. எனவே அனுமதி இல்லாத கட்டிடத்திற்கு மேல் கோபுரம் அமைப்பது சட்டத்திற்கு புறம்பானது என கூறினர். இதனைத்தொடர்ந்து சிதம்பரம் வட்டாட்சியர் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது சரியான முடிவுக்கு பொதுமக்களும் காத்திருக்கிறார்கள். மேலும் வட்டாட்சியர் ஒரு சார்பாக நடந்துகொண்டால் அவரை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறினார்கள்.