Skip to main content

கோடை மழை... மகிழ்ச்சியும், சோகமும்!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
lost life are caused due to rain

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் தாக்கம் அதிகரித்து 109 ஃபாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகியிருந்த நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தனர். தி.மலை, ராணிப்பேட்டை, வேலூரை சேர்ந்த சிலர் ஹீட் ஸ்ட்ரோக்கால் திடீர் மரணத்தை தழுவி மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்தனர்.

வயதானவர்கள், சிறுவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் வெளியே வராதீர்கள் என அரசே எச்சரிக்கை வழங்கி இருந்தது. முக்கிய இடங்களில் ஓ.ஆர்.எஸ் நீரையும் பருக ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தன. இந்த வெயிலின் தாக்கம் எப்போது குறையும் கோடை மழை எப்போது வரும் என பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

கடந்த ஒரு வார காலமாக திடீரென பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த நான்கு  நாட்களாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, வாணியம்பாடி, வேலூர், குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.  ஏலகிரி மலையின் தொடர்ச்சியில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது, பொதுமக்கள் படையெடுத்துள்ளனர் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

அதேநேரத்தில் மழையினால் மக்களுக்கு அதிர்ச்சி தரும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை,  வாலாஜாபேட்டை, சோளிங்கர், ஆற்காடு காவேரிப்பாக்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இடியுடன் கூடிய மழை காரணமாக சோளிங்கர் அருகே ஆடு மேய்த்த தேவிகா என்ற பெண் இடி தாக்கி உயிர் இழந்தார், அதேபோல் சோளிங்கர் அருகே மருதாளம் பகுதியில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான பசு மாடு இடி தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பத்தூர் மாவட்டத்திலும் இடி தாக்கி  மூன்று பசு மாடுகள் உயிரிழந்தன. தந்தை மகன் இடி தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் குற்றால அருவியில் ஒரு சிறுவன் குளித்துக் கொண்டிருக்கும் போது அதீதமாக வந்த நீரால் அவன் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை துறையினர் கூறும் பொழுது,  மழைக்காலங்களில் மின்சார கம்பத்திற்கு அருகில் மரங்களுக்கு அருகில்  நிற்கக்கூடாது. இடி இடிக்கும் பொழுது மின்னல்களின் தாக்கம் மரங்களின் மீதும் மின்கம்பங்களின் மீதும் அதிகமாக இருக்கும் என்கின்றனர். மின் ஒயர்கள் அறுந்து கிடந்தால் அதன் அருகிலேயே செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கின்றனர். மழைக்காலங்களில் ஆற்றில் குளிக்கவோ, சுற்றுலா நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லக்கூடாது என்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘மிகக் கனமழைக்கு வாய்ப்பு’ - ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Chance of very heavy rain Orange Alert issued by Meteorological Dept

தமிழ்நாட்டின் 2 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அன்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இன்றும்(22.06.2024) நாளையும்(23.06.2024) மிகக் கனமழை பெய்யக்கூடும். எனவே இவ்விரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும். மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

Next Story

வாரச் சந்தையால் போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
students and public are suffering due to impact of traffic due to weekly market

ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கும் ராணிப்பேட்டை வாரச்சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தை மைதானத்தில் கடந்த ஓராண்டு காலமாக புணரமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் சந்தையின் உள் புறத்திலும் வெளிப்புறத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. நாள் முழுவதும் இந்த நிலை நீடிப்பதால் இந்தச் சாலையில் ஒவ்வொரு வாரமும் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கடந்த இரண்டு மாதமாக ஒவ்வொரு வாரமும் நெரிசல் இருந்தாலும் மக்கள் சகித்துக்கொண்டனர். இந்த வாரம் மக்களிடம் இது கோபத்தை உருவாக்கியுள்ளது. காரணம், இந்த வாரம் திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுவிட்டது. மாணவ - மாணவிகள் பள்ளிக்கும், கல்லூரிக்கும் நேரத்தோடு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் வாரச் சந்தையால் போக்குவரத்து பாதிப்பால் மாணவ - மாணவிகள் அதில் சிக்கிக்கொண்டனர்.

இதன் காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் எனப் பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடுமையாக அவதி அடைந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வாரச்சந்தை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கட்டுமானம் முடியும் வரை காவல்துறை போக்குவரத்து பிரச்சனையைச் சரிசெய்ய வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.