தமிழகம் முழுவதும் 1,500 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கிராம சேவை மையங்களில் பெரும்பாலானவை பூட்டியே கிடப்பதால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் எல்லா ஊராட்சிகளிலும் கிராம சேவை மையம் மத்திய அரசின் பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் எல்லா ஊர்களிலும் கட்டி முடிக்கப்பட்ட இந்த கிராம சேவை மையங்களில் பல பெரும்பாலான கிராம சேவை மையங்கள் பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நன்மங்கலம் ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையம் பூட்டியே கிடக்கிறது. அது மட்டுமல்லாமல் வேறு பயன்பாடுகளுக்காக அவை பயன்படுத்தப்படுகிறது. குப்பை வண்டிகள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு உடனடியாக தமிழ்நாட்டில் உள்ள கிராம சேவை மையங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிராம சேவை மையங்கள் தொடங்கப்படும் பொழுது இதன் மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என கூறப்பட்டது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இதில் 250க்கும் மேற்பட்ட கிராம சேவை மையம் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கட்டிடமும் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டிலிருந்து 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. உதவித்தொகை, பட்டா, சிட்டா உள்ளிட்ட விண்ணப்பங்களுக்கு நகரங்களை நாட வேண்டிய சூழலில் அதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவே கிராம சேவை மையம் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கிராம சேவை மையங்கள் மூடி கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.