ராசிபுரத்தில், அழகு நிலையத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாகப் பெண் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகக் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையில் காவலர்கள் சந்தேகத்திற்குரிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ராசிபுரம் எல்ஐசி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், அங்குள்ள ஒரு அழகு நிலையத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அந்த நபர், ராசிபுரம் - நாமக்கல் சாலை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஸ் (34) என்பதும், அவர் தனது மனைவி அன்னலட்சுமி (33), அதே பகுதியைச் சேர்ந்த கூட்டாளி ரமேஷ் மகன் நவரத்தினம் (36) ஆகியோருடன் சேர்ந்து கொண்டு அழகு நிலையம் என்ற பெயரில் கஞ்சா விற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சிறையில் அடைத்தனர்.