Skip to main content

தண்டவாளத்தில் விரிசல்; ரயில்கள் நிறுத்தம்; பயணிகள் அவதி

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

 Cracks in rails; train stop; Passengers suffer

 

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

இன்று காலை சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரயில் சுமார் 7 மணி அளவில் அரக்கோணத்தின் மூன்றாவது நடைமேடைக்கு வந்து சேர இருந்தது. அப்பொழுது தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக புளியமங்கலம் ரயில் நிலையத்திலேயே ரயிலானது நிறுத்தப்பட்டது. உடனடியாக அரக்கோணம் ரயில் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட நிலையில் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

 

இதன் காரணமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குச் செல்லக்கூடிய விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திலேயே சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மின்சார ரயில்களும், புறநகர் மின்சார ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட ரயில்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அன்றாட பணிக்குச் செல்வோர் மற்றும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.