தமிழகம் முழுவதும், இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜன. 2) எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராமன் வெளியிட்ட அறிக்கை:
வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்துவிட வேண்டும். வேட்பாளர்கள், முகவர்களுக்கான உணவு, தேநீர், குடிநீர் ஆகியவற்றை வேட்பாளர்களே செய்து கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அலைபேசி உள்ளிட்ட இதர தடை செய்யப்பட்ட பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை மேஜைக்கு வேட்பாளரோ, முகவரோ யாரேனும் ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு மேஜைக்கு ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
சந்தேகத்திற்கிடமான வாக்குகள் கண்டறியப்படும் வாக்குகளை பார்வையிட, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜையில் ஒரு நபரை பார்வையாளராக நியமிக்கலாம். வாக்குச்சீட்டுகள் பிரிப்பு மேஜையில் ஒரு வேட்பாளருக்கு ஒருவரை மட்டும் பார்வையாளராக நியமித்துக் கொள்ளலாம்.
தேர்தல் நடத்தும் அலுவலரால், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அடங்கிய தேர்தல் விவரப் பட்டியல் வழங்கப்படும். இவ்வாறு வேட்பாளர்கள், முகவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
வாக்கு எண்ணிக்கை நாளை (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்குகிறது. முன்னிலை விவரங்கள் தெரிய மதியம் ஒரு மணி ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, உரிய படிவத்தில் வழங்கப்படும் என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.