
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் திமுக சார்பில், ‘தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்’ என்ற தலைப்பில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டம் இன்று (12.03.2025) மாலை நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில், “பிரதமர் மோடி அவர்களே, கடந்த 06.12.2012 அன்று குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கூறியது ஞாபகம் இருக்கிறதா? ‘குஜராத் மக்கள் 60 ஆயிரம் கோடியை டெல்லிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், திரும்ப வருவது மிகக் குறைவு. குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா?’ என்று கேட்டீர்களே. அதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கிறேன. ‘தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?’. நாங்கள் உழைத்து வரியாகச் செலுத்திய பணத்தில் எங்களுக்கான நிதியைக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?.
43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்கான நிதியை விடுவிக்காமல் மிரட்டுறது நியாயமா?. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். உண்மையிலேயே மக்களுக்கான, மாணவர்களுக்கான திட்டமாக இருந்தால் நாம் ஏன் அதை எதிர்க்கப் போகிறோம்?. அனைவரையும் கல்விக்குள்ளே அழைத்து வரும் திட்டமாக இருந்தால் அதை வரவேற்றிருப்போமே?. ஆனால், தேசியக் கல்விக் கொள்கை அப்படிப்பட்டதா? கல்வியில் இருந்து மக்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை செயல்திட்டங்களையும் கொண்டதாகத்தான் இந்தக் கல்விக் கொள்கை இருக்கிறது. அதனால்தான் எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்று அதை வரைவு கொள்கையாக வெளியிட்டபோதே, கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, தெளிவான ஆய்வறிக்கையை வெளியிட்டோம்.
தேசியக் கல்விக் கொள்கை என்பது, கல்விக் கொள்கை அல்ல. அது காவிக் கொள்கை. அது இந்தியாவை வளர்க்க உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை அல்ல. இந்தியை வளர்க்கக் கொண்டு வரப்பட்ட காவிக் கொள்கை. இந்தக் கல்விக் கொள்கை, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை மொத்தமாக அழித்து, ஒழித்துவிடும் என்றுதான் நாம் எதிர்க்கிறோம். சமூகநீதி எனப்படும் இட ஒதுக்கீட்டை தேசிய கல்விக் கொள்கை ஏற்கவில்லை. பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தரும் உதவித் தொகையை இந்தக் கொள்கை மறுக்கிறது. மூன்று, ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வை வைத்து வடிக்கட்டப் பார்க்கிறார்கள். ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையைக் கொண்டு வரப் போகிறார்கள்! அதாவது ஆல் இந்தியா எக்ஸாம் போன்று நடக்கும்.
உங்கள் மகனோ, மகளோ 12ஆம் வகுப்பு முடித்துட்டு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் உடனே சேர முடியாது. இப்போது மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நீட் தேர்வு வைப்பது போன்று, கலைக் கல்லூரிக்கும் தேர்வு வைத்துதான் எடுப்பார்கள். அந்தத் தேர்வையும், கல்லூரிகள் நடத்தாது; தேசிய அளவில் தேர்வு ஏஜென்சிதான் நடத்தும். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள், அவர்களாகவே வெளியேறலாம். இவ்வாறு சொல்வதே, ‘போ’ என்று விரட்டுவதற்குச் சமம். ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி என்ற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். குலத் தொழிலை, ஜாதித் தொழிலைத் தொடராமல், படித்து முன்னேற நினைப்பவர்களை மீண்டும் அதை நோக்கித் தள்ளப் பார்க்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஆணித்தரமாகச் சொல்கிறோம். ஆனால், இதையெல்லாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் சொல்கிறார்.

இரண்டாயிரம் கோடி என்ன? பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஸ்டிராங்காக சொல்லிவிட்டேன். அந்தக் கோபத்தில்தான் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேல் கோபப்படுகிறார். நமக்கு ஜனநாயகத் தன்மை இல்லையாம். நாகரிகம் இல்லையாம்ம், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய இனம், நம்முடைய தமிழினம். உலகத்திற்கு, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பாட்டை உருவாக்கிக் கொடுத்தது. அத்தகைய தமிழர்களுக்கு ஜனநாயகம் தெரியாதா?. நாகரிகம் தெரியாதா? வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அறம் பேசும் தமிழினத்துக்கு ஜனநாயகத்தைப் பற்றி வகுப்பு எடுக்காதீர்கள். நீங்கள் என்னவோ ஹெட்மாஸ்டரைப் போல, நாங்கள் மாணவர்கள் போல எங்களுக்கு வகுப்பெடுக்க வந்திருக்கிறீர்களா?. தமிழ்நாடு விடாமல் போராடுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறார் தர்மேந்திர பிரதான்” எனப் பேசினார்.