அடிப்பாகத்தில் குட்டி பேட்டரி செல்லுடன் இணைந்த பல்பு.! மேல்புறத்தில் பல வண்ணங்கள் கோண்ட ஜெல்லி மிட்டாய்.. அதனூடே இதழில் பூசப்படும் லிப்ஸ்டிக் நிறமி..!! விலையோ ரூ.5 மட்டுமே..! இந்த மிட்டாயை வாங்கி உண்டால் இதழ் லிப்ஸ்டிக் போட்டது போல் இருக்கும். அது போக, அடிப்பாகத்தில் அழுத்தம் கொடுத்தால் உள்ளிருந்து பல்பு மிளிரும். இது தான் குழந்தைகள் விரும்பி உண்ணும் லேட்டஸ்ட் லிப்ஸ்டிக் மிட்டாய்..!
ஒரே மிட்டாயில் பல நன்மைகள் (..?) இருப்பதால் குழந்தைகளின் முதன்மை விருப்பத் தேர்வும் இதுவே.! அரசால் தடைச்செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் கிராமத்தினைத் தாண்டி நகரத்திலும் விரிவடைந்துள்ளது லிப்ஸ்டிக் மிட்டாய் மார்க்கெட். அரசுக் கண்டுக்கொள்ளாமல் போக, இதனால் தற்பொழுது ஒரு குழந்தையின் உயிர் ஊசலாடுவது தான் பரிதாபம்.!!
சிவகங்கை பள்ளித்தெருவைச் சேர்ந்தவர் ரூபேஷ், கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி. மாற்றுத் திறனாளி. இவர்களது மகள்கள் ஜெனிலியா, மெடில்டா. இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பும், எல்.கே.ஜி.,யும் படிக்கின்றனர். ‘லிப்ஸ் டிக்’ மிட்டாய்களை விரும்பி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்ட இக்குழந்தைகளில் மெடில்டா கடந்த வாரத்தில் இந்த லிப்ஸ்டிக் மிட்டாயை சாப்பிடும் பொழுது, அடிப்பகுதியிலிருந்த பேட்டரி செல்லை அழுத்த, அது மிட்டாயுடன் வயிற்றுக்குள் சென்றுவிட்டது.
உடனடியாக குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவரிடம் சென்று காண்பிக்க, அவரும் சாதாரண மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளார். இருப்பினும் வலி தாங்காமல் துடிக்கவே, மறுநாள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமி மெடில்டாவுக்கு எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு அதனை கவனிக்காமல் சிறுமிக்கு எந்த சிகிச்சையும் அளிக்கமால் அவர்களும் மாத்திரையைக் கொடுத்து அனுப்பியுள்ளனர். அப்பொழுதும் வலி குறையாயததால் வீடு திரும்பிய குழந்தையின் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது அதில் பேட்டரி செல் வயிற்றின் அடிப்பகுதியில் இருப்பது தெரிந்தது.
மீண்டும் சிவகங்கை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு சென்று மீண்டும் இதனைக் கூறி வலியுறுத்த உரிய சிகிச்சை அளிக்காமல் அலைகழித்து வருவதாக குற்றச்சாட்டினை வைத்துள்ளனர் பெற்றோர்கள். தற்பொழுது மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையினை நாடியுள்ளனர் இந்த ஏழைப் பெற்றோர். லிப்ஸ்டிக் மிட்டாயின் விபரீதத்தை அரசு உணர்ந்து அதனை தடை செய்ய வேண்டுமென்பதே பெற்றோர்களின் கோரிக்கை..!