
வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகையின் பாக்கியைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையினரால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையான 3 கோடியே 80 லட்சத்தை வழங்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.03.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “இழப்பீடு வழங்க வாரக் காலம் அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை எற்றுகொண்ட உயர்நீதிமன்றம், “வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை (பாக்கி) 3 வாரங்களில் வழங்க உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.