காதல் திருமணத்தை சில பெற்றோர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சிலர் வசதி வாய்ப்பை கருத்தில் கொண்டு அல்லது சாதியை காரணம் சொல்லி ஏற்றுக்கொள்வதில்லை. இந்த மாதிரி சூழலில் குமரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த பெண்ணை அவரது பெற்றோர் கடத்திச் சென்றுள்ளதாக கலெக்டரிடமும், காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சோ்ந்த பியூட்லினும் வெள்ளிச்சந்தையை சோ்ந்த சரண்யாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனா். வெவ்வேறு பிரிவைச் சோ்ந்த இவா்களுடைய காதலுக்கு சரண்யாவின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனா். ஆனால் சரண்யா, பியூட்லினை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார்.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் காதலா்கள் இருவரும் கோவில் ஒன்றில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனா். இவா்களின் திருமணத்தை பியூட்லினின் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதால் அவா்களை தங்கள் வீட்டில் அனுமதித்தனா். ஆனால் சரண்யாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிச்சந்தை போலிசில் புகார் கொடுத்தனா். இதனால் போலிசார் அந்த காதல் தம்பதிகளை கடந்த 25-ம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்தனா்.
போலிசின் அழைப்பை ஏற்று அந்த காதல் தம்பதிகள் போலிஸ் நிலையம் வந்தனா். அப்போது அங்கு நின்று கொண்டியிருந்த சரண்யாவின் பெற்றோர்களும் உறவினா்களும் பியூட்லினை தாக்கி விட்டு சரண்யாவை கடத்தி சென்றனா். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதும் போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பியூட்லின் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தநிலையில் பியூட்லினின் தாயார் தாசம்மாள் மற்றும் உறவினா்கள், தனது மருமகளான மகனின் காதல் மனைவியை கவுரவ கொலைக்காக அவளின் பெற்றோர்கள் கடத்தி சென்று இருப்பதாகவும், காவல்நிலையத்தின் முன் வைத்து என்னையும் மகனையும் தாக்கி விட்டு மருமகளை கடத்தி செல்லும் போது போலிசார் வேடிக்கை பார்த்து நின்றாகவும் மேலும் மருமகள் சரண்யாவை கவுரவ கொலை செய்ய போகிறோம் என போனில் மிரட்டுவதாகவும், எனவே மருமகளை மீட்டு தர வேண்டுமென்று கலெக்டா் மற்றும் எஸ்பியை சந்தித்து தாசம்மாள் மனு கொடுத்துள்ளார்.