திருப்பூரில் கடந்த நான்கு நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைப் புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக சிறுத்தை புலி ஒன்று பொதுமக்களைத் தாக்கி வந்தது. இதில் 7 பேர் கடுமையான காயம் அடைந்தனர். அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிறுத்தைப் புலியை படிக்க வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர முயற்சி எடுத்து வந்தனர். ஆனால், உடனடியாக அவர்களால் சிறுத்தைப் புலியை பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து பலமணி நேரம் சிறுத்தைப் புலி போக்கு காட்டி வந்தது. இந்நிலையில் இன்று காலை சிறுத்தைப் புலி பதுங்கி இருந்த இடத்தை கண்டறிந்த வனத்துறையினர் அதைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இறுதியாக சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் பாதி மயக்கத்தில் இருந்த புலியை வலை வீசி வனத்துறையினர் பிடித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.