சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முழுவுருவ சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று (28/05/2022) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், தயாநிதிமாறன், கனிமொழி, ஏ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திமுக தொண்டர்களும் திமுக கொடியுடன் குவிந்திருந்தனர். இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியோரும் கலந்துகொண்டனர். சிலை திறப்புக்கு பின்னர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின், வெங்கையா நாயுடு ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
சிலை திறப்பு நிகழ்வை தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் பேசிய இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, '' நமது நாட்டில் வேறுபட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. பல மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்கின்றனர். நாம் அனைவரும் மக்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறோம். இந்தியாவின் பெருமைமிக்க முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர். கலைஞர் சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் சிலையை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர். நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் கலைஞர். என் இளம் வயதில் கலைஞரின் உரைகளால் ஈர்க்கப்பட்டேன். பன்முகத்தன்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கலைஞர். என்னுடைய பொது வாழ்வில் கலைஞர் உடனான உறவு மறக்கமுடியாது. கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஜனநாயகத்திற்காக வாதாடினேன்.
தமிழ் சினிமாவின் போக்கை தொடங்கி வைத்தவர் கலைஞர். மக்களை நடுநாயகமாக கொண்ட அரசியலை முன்னெடுத்தவர் கலைஞர். அதேபோல் மாநிலங்களின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். தாய்நாடு, தாய்மொழி வளர்ச்சி என்பது அடிப்படையானது. தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தும். நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல, எனது மொழிக்கு ஆதரவானவன். இந்தியாவின் பன்முகத் தன்மையை ஏற்று அதனை அங்கீகரிக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் நடைமுறைப்படுத்தியவர் கலைஞர். மக்களின் முன்னேற்றத்திற்காக உழவர் சந்தை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் சிறப்பு'' என்றார்.