மேட்டூர் அருகே நிலத்தின் பேரில் கடன் தருவதாகக் கூறி, பல பேரிடம் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தன் பெயருக்குக் கிரயம் செய்து ஏமாற்றிய மோசடி கும்பல் தலைவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, ஜலகண்டாபுரம் பச்சகுப்பனூரைச் சேர்ந்தவர் ரவி (60). மோட்டார் மெக்கானிக். இவரிடம், சேலம் கன்னங்குறிச்சி ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் 40 லட்சம் ரூபாய் கடன் தருவதாகக் கூறி, ரவியின் நிலத்தை தன் பெயருக்குக் கிரயம் செய்து கொண்டார். ஆனால் உறுதியளித்தபடி சசிகுமார் கடன் கொடுக்கவில்லை. நிலத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து ரவி, ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சசிகுமாரை ஜூலை 11 ஆம் தேதி கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில், அவர் பல பேரிடம் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களைக் கிரயம் செய்து, மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேச்சேரியைச் சேர்ந்த வாசுதேவன், அர்ஜுனன், பழனிசாமி, சங்ககிரியைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோரிடமும், தர்மபுரி மாவட்டம் மொரப்பூரைச் சேர்ந்த அஷ்வின், சந்திரசேகரன், சுந்தராம்பாள் ஆகியோரிடமும் நிலத்தின் பேரில் கடன் தருவதாகக் கூறி, அவர்களின் நிலங்களைத் தன் பெயரில் பதிவு செய்து கொண்டு ஏமாற்றியுள்ளார்.
சசிகுமாருக்கு உடந்தையாகச் செயல்பட்ட அருள்மொழி, பிரேம்குமார், முருகன் என்கிற பச்சியண்ணன், கொல்லப்பட்டி குமார், கன்னந்தேரி சரவணன் உள்ளிட்டோரை கைது செய்யவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே, இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த உடையானூர் மாணிக்கம் மகன் ரவி (53), மேச்சேரியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சிவகுமார் (46), பொட்டனேரியைச் சேர்ந்த சேகர் (62) ஆகியோரை மேச்சேரி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் காவல்துறையினர் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.