தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. புழல் ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்மூலம் கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமாகி இருக்கிறது.
சிறையில் கைதிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. செல்போன் மூலம் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. அதில், அறைக்குள் கட்டில் போடப்பட்டு அதில் சொகுசு மெத்தையும் விலை உயர்ந்த தலையணைகளும் போடப்பட்டு, உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு, வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டு உள்ளன.
டி-சர்ட், அரைக்கால் சட்டை ஆகியவற்றுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடி உல்லாசமாக சுற்றுலா பயணம் மேற்கொள்வது போல டிப்-டாப்பாக உடைகளை அணிந்து, விலை உயர்ந்த ஷூக்களையும் கைதிகள் அணிந்து சிறைக்குள் போஸ் கொடுத்துள்ளனர்.
இதேபோல அலுவலங்களுக்கு மதிய உணவு எடுத்துச் செல்ல பயன்படுத்தும் டிபன்பாக்ஸ்களும் சிறைச் சாலைகளுக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதில் விதவிதமான உணவு வகைகளும் உள்ளன. ஜெயிலுக்குள்ளேயே இந்த உணவு வகைகள் சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எலக்ட்ரிக் குக்கர்களும் படத்தில் உள்ளன.
இந்த நிலையில் சென்னை புழல் சிறையில் ஏ.டி.ஜி.பி. அசுதேஷ் சுக்லா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புழல் சிறையில் வெளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன் எடுக்கப்பட்டவை. புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.