Skip to main content

அக்னி நட்சத்திர வெயில்! குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு!

Published on 13/05/2020 | Edited on 14/05/2020

 

kutralam Flooding

 

மே 3 அன்று தொடங்கியது கோடையின் உட்சபட்ச வெயிலான அக்னி நட்சத்திரக் கத்தரி வெயில். நெல்லை தென்காசி மாவட்டத்தின் வெயிலின் அளவு 102 டிகிரி செல்சியசை தாண்டியது. திடீரென்று பருவ நிலை மாற்றம் காரணமாக வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சியினால், தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக மழைபெய்ய தொடங்கியது. குறிப்பாக அருவிகளின் நகரமான குற்றாலம் பகுதியில் இதமான காற்றும் வீசியது, மழையும் பெய்தது. நேற்றைய தினம், அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை தொடர்ந்து பெய்ததால், நேற்று இரவு குற்றாலம் மெயினருவியில் வெள்ளப் பெருக்கெடுத்தது. பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி தடாகத்தில் தண்ணீர்கொட்டியது. அருகிலுள்ள புலியருவியிலும் இதே போன்று தண்ணீர் கொட்டியது.


அருவியில் தண்ணீர் ஆர்ப்பரிக்க 40 நாள் ஊரடங்கு காரணமாக யாரும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பலத்த மழை காரணமாக குற்றாலம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அதே சமயம் தென்காசி தெப்பகுளம் பகுதியில் மரம் விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு ஒரு மணிநேரத்திற்குப் பின்பு மின்சாரம் சீரானது.

இதனிடையே கேரளாவில் மே. 16 அன்று தென்மேற்குப் பருவமழை தொடங்குவதால்  மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. அது தொடங்கும் பட்சத்தில் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து ஏற்படலாம். கரோனா தொற்றும், ஊரடங்கும் நீடித்தால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவது சாத்தியமில்லைதான்.

 

 

சார்ந்த செய்திகள்