கர்நாடகா தேர்தலை முன்னிட்டு 15 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்து வந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 14ம் தேதி முதல் தொடர்ந்து 8 நாட்களாக விலையை உயர்த்தி வருகின்றன. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.79.47 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.71.59 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது போன்ற காரணங்களால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொத்தமாக விலையை உயர்த்தினால் போராட்டத்தில் ஈடுபடலாம், ஆனால் இப்படி தினமும் பைசா கணக்கில் கண்ணுக்கு தெரியாமல் விலையை உயர்த்தி மக்களுக்கு கடும் சுமையை தருகிறது மத்திய அரசு என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அவற்றின் மீது விதிக்கப்படும் சுங்க வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.