Skip to main content

7 முறை மயக்க ஊசி செலுத்தியும் தப்பிய கருப்பன்; உறையும் தாளவாடி

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

 Karuppan survived 7 anesthetic injections; Congealing talavadi

 

'கருப்பன்' இந்த பெயரை கேட்டாலே தாளவாடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் அச்சத்தில் உறைவர். காரணம் கடந்த ஒரு வருடமாக தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி மட்டும் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இங்குள்ள வனப் பகுதியில் இருந்து கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய கருப்பன் என்ற காட்டு யானை அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் தோட்டத்தில் காவல் காத்த 2 விவசாயிகளையும்  கொன்றுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். அதன்படி பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து முதல் முறையாக ராமு, சின்னத்தம்பி என்ற கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. அதன் பின்னர் சலீம், அரிசி ராஜா, கபில்தேவ் என்ற மூன்று கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. இந்த கும்கிகளின் உதவியுடன் வனத்துறையினர் மருத்துவ குழுவினர் தோட்ட பகுதிகளுக்கு சென்று கருப்பன் யானைக்கு இது வரை 7 முறை மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் மயக்க ஊசிக்கு மயங்காமல் கருப்பன் யானை ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் தப்பி சென்று விட்டது.

 

இதனால் கருப்பன் யானையை பிடிக்க வந்த கும்கி யானைகளும் டாப்சிலிப்புக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் கொஞ்சநாள் கருப்பன் தொந்தரவு இல்லாமல் விவசாயிகள் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் மீண்டும் கருப்பன் யானை தோட்டத்துக்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் இருந்து பொம்மன் சுஜய் என்ற இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து மீண்டும் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முறையும் கருப்பன்  யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி விட்டு தப்பியது.

 

இதனால் கருப்பனை பிடிக்க வந்த 2 கும்கி யானைகளும் முதுமலை தெப்பகாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. எப்படியாவது கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து கருப்பன் யானை மீண்டும் வெளியேறியது. பின்னர் மாதள்ளி இந்த கிராமத்துக்குள் புகுந்த அங்குள்ள விவசாயி சுட்பண்ணா என்பவரது வாழை தோட்டத்துக்குள் புகுந்தது அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை குருத்துக்களை தின்றும், மரங்களை மதித்தும் சேதப்படுத்தியது. அதன் பின்னர் விவசாயிகள் ஒன்றிணைந்து சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் கருப்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து கருப்பன் யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த முட்டைக்கோஸ் தோட்டத்துக்குள் புகுந்து சேதப்படுத்தி உள்ளது. இதன் சேதம் மதிப்பே லட்சக்கணக்கில் இருக்கும். பின்னர் மீண்டும் கருப்பன் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

 

இதனால் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். வனத்துறையினர் எப்படியாவது கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், ஆனால் ஒரு வருடமாக கருப்பன் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர். அதே சமயம் எப்படியாவது கருப்பன் யானையை பிடித்து விடுவோம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்