தமிழ்நாட்டில் 1995- ஆம் ஆண்டில் ஏழு லட்சம் பரப்பளவு ஹெக்டேர் சாகுபடியாக இருந்த நிலக்கடலை சாகுபடி தற்போது 3 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இக்குறைவுக்கு முக்கிய காரணமாக இருப்பது தரமற்ற விதைகள். விவசாயிகளுக்கு தரமான விதைகள் சரியான நேரத்தில் கிடைக்காமல் போவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பருவமழை பெய்தவுடன் விவசாயிகள் அருகிலுள்ள வியாபாரிகளிடமிருந்தும், தனியார் கடைகளிலிருந்தும் தரமற்ற விதைகளைப் பெற்று சாகுபடி செய்வதால் மகசூல் குறைவதுடன், பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியவில்லை. இந்த குறைபாட்டினை போக்கும் வகையில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் இயங்கக்கூடிய மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நிலக்கடையில் அதிக விளைச்சல் தரக்கூடிய, சான்று விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடைமுறை எடுக்கப்பட்டது.
இந்த நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உயர் விளைச்சல் ரகமான வி.ஆர்.ஐ-08 என்ற கொத்து ரகத்தில், 50 டன்கள் தரமான சான்று விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக தயார் நிலையில் உள்ளது என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்வதற்கு சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்த நிலையில், தற்போது வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை விதைகளை வாங்கி பயன்பெற வேண்டும் என்று விவசாயிகளுக்கு மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ நிலக்கடலை விதை 90 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், தேவைப்படுவோர் மண்டல ஆராய்ச்சி நிலையத்திற்கு தொடர்புகொண்டு வாங்கிச் செல்ல வேண்டும். விவசாயிகள் 94430- 46221 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விதைகளை வாங்கிச் செல்லலாம். இவ்வாறு மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் மோதிலால் கூறியுள்ளார்.