கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது கல்வராயன் மலை. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த மலை கிராமத்தில் வேங்காடு கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய பலா பூண்டி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரை அடுத்துள்ளது பொற்பம் கிராமம். இந்த ஊரில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் போக்குவரத்து வசதிக்கான சாலை வசதிகள் இல்லை. தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத் தலைநகரமான கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்கு மலைப்பகுதியில் நடந்தே செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே தங்கள் ஊருக்குத் தார் சாலை அமைத்து தர வேண்டி பலமுறை மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோன்று பெரிய பலா பூண்டி, பொற்பம், துரூர், வெள்ளரிக்காடு ஆகிய ஊர்களுக்கு இடையே இணைப்புச் சாலை வசதிகளும் இல்லை. அந்த ஊர்களை இணைக்கும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பல போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
மேலும், இந்த மலையில் வாழும் கிராம மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வரும் விவசாய நிலங்களுக்கு வருவாய்துறை பட்டா வழங்க மறுத்து வருகிறது. மேலும், அனுபோக பாத்தியதை மூலம் அனுபவித்துவரும் நிலங்களில் இருந்து வெளியேறச் சொல்லி வனத்துறை அவ்வப்போது தொந்தரவு அளித்து வருகிறது. இதுபோன்ற பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கல்வராயன் மலை மக்களுக்கு அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு எந்தப் பணிகளும் திட்டங்களும் வந்து சேரவில்லை. இவற்றுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள் மலைகிராம மக்கள்.
வனத்துறையினரின் கெடுபிடிகளை அரசும் அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால், இதனைக் கண்டிக்கும் விதமாக வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி, வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பெரிய பலா பூண்டி கிராம மக்கள் நோட்டீஸ் ஒட்டி அறிவித்துள்ளனர். தாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலர், கல்வராயன்மலை வட்டாட்சியர் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி உட்பட பலருக்கும் மனு அனுப்பியுள்ளனர். கல்வராயன் மலை கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவர்களின் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காணப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. மலை மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை, வசதிகளை எப்போதுதான் இந்த அரசு தீர்த்து வைக்கும் என்று கேள்வியை முன்வைக்கிறார்கள் கல்வராயன் மலை கிராம மக்கள்.