இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் துவக்க வீரர்களாக க்ராவ்லி மற்றும் டக்கெட் களம் இறங்கினர். இந்த இணை முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 50 ரன்களைக் கடந்த நிலையில், முதல் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். தொடர்ந்து அடுத்தடுத்து போப் மற்றும் க்ராவ்லி ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.
60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்த நிலையில், ரூட் மட்டும் பேர்ஸ்டோ இணை ஓரளவு நிலைத்து நின்று ஆடியது. 37 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோ அக்சர் பந்தில் கிளீன் போல்டு ஆனார். பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆட தவறினர். ரூட் 29 ரன்களும், அகமத் 13 ரன்களும், போக்ஸ் 4, ஹாட்லி 23, மார்க் 11 என ஆட்டம் இழந்தனர். ஆனால், மறுபக்கம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஸ்டோக்ஸ் அரை சதம் கடந்து 70 ரன்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 64.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்ப்பாக பந்து வீசிய அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் அக்சர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர், முதல் இன்னிங்சை ஆடத்துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித், ஜெய்ஸ்வால் இணை சிறப்பான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 80 ரன்களை சேர்த்த போது ரோஹித் 24 ரன்களில் ஆட்டம் இழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து 76 ரன்களுடனும், கில் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- வெ.அருண்குமார்