கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இரண்டு மாவட்டங்களிலும் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் நடவடிக்கையாக காவல்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் திருக்கோவிலூர் அருகே உள்ள மிலாரி பட்டு என்ற கிராமத்தில் வாக்காளர்களுக்கு இலவசமாக கொடுப்பதற்கு மின்விசிறிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் திருக்கோவிலூர் துணை தாசில்தார் விஜயன் தலைமையில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகளும் மிலாரி பட்டு கிராமத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், அதே ஊரில் உள்ள ரகோத்தமன், மணிகண்டன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில், 100 மின்விசிறிகள் அட்டைப் பெட்டிகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த மின்விசிறிகள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த 100 மின்விசிறிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக ரகோத்தமன், மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே கிராமத்தில் நூறு மின்விசிறிகள் பிடிக்கப்பட்டது இப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.