விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் மீன்பிடிக்கும் பொழுது கழுவெளியில் தவறிவிழுந்து உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் மற்றும் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், “விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம். மரக்காணம் (தெற்கு) கிராமம் சந்தைத் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் லோகு என்கிற லோகேஷ் (வயது 24).
இவர் நேற்று (22.12.2024) இரவு சுமார் 07.00 மணியளவில் மரக்காணம் அருகே உள்ள கழுவெளியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகக் கழுவெளியில் அவர் தவறி விழுந்து விட்டார். மேலும் அவருடன் மீன்பிடிக்க வந்த அவருடைய இரண்டு சகோதரர்களான விக்ரம் (வயது 20) மற்றும் சூர்யா (வயது 20) ஆகியோர் அவரை தேடும் பொழுது, அவர்களும் கழுவெளியில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரையும் கழுவெளியில் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று (23.12.2024) மூவரும் தீயணைப்புத் துறையினரால் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த துயரமான செய்தியினை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.