மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், கடந்த 10 நாட்களில் வெங்காயத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.2,000 குறைந்துள்ளதால், அம்மாநில விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த, தேசியவாத காங்கிரஸ் தலைவரான துணை முதல்வர் அஜித் பவார், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடந்த 19ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், விலை வீழ்ச்சியால் வாடும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், வெங்காய விலை சரிவை கண்டித்து பா.ஜ.க அமைச்சருக்கு விவசாயி ஒருவர் வெங்காய மாலை அணிவித்து போராட்டம் நடத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் சிராய் கிராமத்தில் மத நிகழ்ச்சி ஒன்று நேற்று இரவு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க தலைவரான மகாராஷ்டிரா மீன்வளத்துறை அமைச்சர் நித்தேஷ் ரானே, கலந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, வெங்காய உற்பத்தியாளர் என்று கூறப்படும் விவசாயி ஒருவர், மேடை ஏறி அமைச்சர் நித்தேஷ் ரானேவுக்கு வெங்காய மாலை அணிவிக்க வந்தார். இதனை கண்டு அசாதாரண நிலையை எதிர்கொண்ட அமைச்சர் நித்தேஷ், முதலில் மறுத்தார். அதன் பிறகு, அந்த மாலையை தனது கழுத்தில் வாங்கிகொண்டார். இதனையடுத்து, அந்த விவசாயி மைக்கில் பேச முயன்றதால், அங்கிருந்த போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.