திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் அமைந்து தலைமை தபால் நிலையத்திற்கு அருகில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் அரையாண்டு தேர்வு முடித்துவிட்டு விடுமுறை கொண்டாட்டமாக இன்று (23.12.2024) காவேரி ஆற்றுக்கு வந்துள்ளனர். அதன்படி மாணவர்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே எட்டு பாலம் அருகே உள்ள படித்துறை காவிரி ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனர்.
அப்போது இரண்டு மாணவர்கள் நீரில் சிக்கிக் கொண்டார்கள். இதனைக் கண்டு இருவரையும் காப்பாற்றச் சென்ற மற்றொரு மாணவரும் நீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்து அருகில் இருந்தவர்களிடம் மற்ற மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல் துறையினர் மற்றும் திருச்சி, ஸ்ரீரங்கம், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தண்ணீரில் முதலை ஒன்று தென்பட்டதால் தேடுதல் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மீட்புப் பணியை எளிமையாக்கு வகையில் முக்கொம்பு மேல் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாயமான மாணவர்கள் ஜாகிர் உசேன், விக்னேஷ் மற்றும் சிம்பு எனத் தெரியவந்துள்ளது. காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.