கடந்த 2020- ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி, பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்துப் பேசினார். இதற்காக, பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்திருந்தது. ஆராய சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லி தலைமையிலான 4 பேர் அடங்கிய குழு, கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் அலுவலகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும் என, அக்குழு பரிந்துரைத்திருந்தது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 16- ஆம் தேதி அன்று டெல்லியில் கூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, குழுவின் பரிந்துரையை ஏற்று பெண்ணின் திருமண வயதை 18- ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலே இதற்கான மசோதாவைத் தாக்கல் செய்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு, சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் முடிவுக்கு கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆதரவும், எதிர்ப்புமாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் உள்ள பெண்கள் குறிப்பாக, மாணவிகள், இளம்பெண்கள் கவனத்திற்கு, திருமண வயதைச் சட்டப்படி 21 ஆக உயர்த்துவது குறித்த உங்கள் கருத்தை எனது அலுவலக வாட்ஸ் அப் எண்ணிற்கு 944-218-2636 அனுப்புங்கள். உங்கள் கருத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் எங்கள் நிலைப்பாடு அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.