Skip to main content

ஆண்டாள் கோவிலில் அவமதிப்பு; தீண்டாமை கொடுமையால் வெளியேற்றப்பட்ட இளையராஜா!

Published on 16/12/2024 | Edited on 16/12/2024
Ilayaraja insulted inside the Andal temple

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  இளையராஜா வெளியிட்ட ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு 15ஆம் தேதி மாலை  நாட்டியாஞ்சலி நடைபெற்றது.  ராமானுஜ ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ  ஜீயர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளையராஜா சென்றிருந்தார். சிறப்பாக வரவேற்று, மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி,   இளையராஜாவுக்கு தடபுடலாக மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சி மேடையில்  இளையராஜா ஏறியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. எல்லாம் சரியாக நடந்த நிலையில், ஆன்மிகச் சிலிர்ப்பு மேலிட,  ஜீயர்கள் மற்றும்  அய்யங்கார்களுடன் ஆண்டாள் கோவிலுக்குள் இளையராஜா சென்றார்.  அப்போது கருவறை என்று சொல்லப்படும் மூலஸ்தானத்துக்கு முன்பாக  உள்ள அர்த்தமண்டபத்துக்குள் அவர்களுடன் சென்றுவிட்டார். ஆனால் உடனே அவர் தடுக்கப்பட்டு அர்த்தமண்டபத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். வாடிய  முகத்துடன் அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறிய இளையராஜா, பக்தர்களுடன் பக்தர்களாக வாசலில் இன்று வணங்கினார்.

Ilayaraja insulted inside the Andal temple

இந்தியாவில் விவிஐபியாக இருந்தாலும், அர்த்தமண்டபம் வரை செல்வதற்கு  வர்ணத்தின் அடிப்படையில் ஆகமவிதிகள் அனுமதிப்பதில்லை என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இளையராஜாவிடம் இதனைப் பக்குவமாக  எடுத்துச் சொல்ல, வாடிப்போன முகத்துடன் அர்த்தமண்டபத்திலிருந்து  வெளியேறிய இளையராஜா,  பக்தர்கள் கூட்டத்துடன் கூட்டமாக வாசலில்  நின்றுகொண்டார்.

மத்திய அமைச்சர்களாக இருந்தாலும் சங்கரமடத்தில் அவர்களது பதவிக்கான  மரியாதையைப் பெற்றுவிட முடியாது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்  ராதாகிருஷ்ணன், இன்றைய மத்திய அமைச்சர் எல்.முருகன் போன்றோருக்கு  அத்தகைய அனுபவம் கிடைத்துள்ளது. சம்பந்தப்பட்ட புகைப்படங்களும்  வெளிவந்துள்ளன. ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு ரூ.8 லட்சம் நிதியளித்த நிலையிலும், இளையராஜாவை அப்போது கோபுர விமானத்தில் ஏற  அனுமதிக்கவில்லை. இத்தகைய நிகழ்வுகளின் தொடர்ச்சியாகத்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலும், சாதியின் அடிப்படையில்  இளையராஜா உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இதனை எப்படி எடுத்துக்கொள்வாரோ தெரியவில்லை.  ஆன்மிகவாதிகள் என்றாலும், சுயமரியாதை உள்ளவர்களால், ஒருபோதும்  இத்தகைய அவமதிப்பை ஏற்றுக் கொள்ளமுடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

சார்ந்த செய்திகள்