‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசிவருகின்றனர். அந்த வகையில் வி.சி.க. கொள்கைப் பரப்பு துணை செயலாளர் ஆதிமொழி, அக்கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் இடைநீக்கம் செய்தது சரியான முடிவு என்று நினைக்கிறேன். திருமாவளவன் ஒரு அறிக்கைவிட்டால் அதன் தொடர்ச்சியாக முரணான அறிக்கையை ஆதவ் அர்ஜுனா வெளியிடுவார். இப்படி மீறி செயல்பட்டதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை அரசியல் பேச வேண்டாம் என்று சொல்லி கலந்து கொள்ள திருமாவளவன் அனுமதித்தார். ஏனென்றால் அந்த நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவும் தன்னுடைய உழைப்பை போட்டுள்ளார். ஆனால் கலந்துகொள்ள அனுமதி வாங்கிக் கொண்டு அந்த மேடையில் அவர் அரசியல் பேசியிருக்கிறார். திருமாவளவன் பேச்சை மீறி அவர் தி.மு.க. ஆட்சியை விமர்சித்து 2026 தேர்தல் களத்தைப் பற்றிப் பேசினார். அவர் இப்படி மீறி செயல்பட்டால் திருமாவளவன் தலைமை மீது நம்பகத்தன்மை போய்விடும், அந்த நம்பகத்தன்மை போய்விடக்கூடாது என்பதற்காக அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் ஆகியோர் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று இப்போதுதான் பேசி வருகிறார்கள். ஆனால் திருமாவளவன் இதைப் பேசி, 25 ஆண்டுகளுக்கு மேல் அதற்கான உழைப்பை போட்டு வருகிறார். நான் ஒரு பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த போது வருங்கால முதல்வர் எழுச்சி தமிழர் என்பதை டிசைன் செய்து திருமாவளவனுக்கு அனுப்பினேன். அதற்கு அவர் அதற்கான காலம் இதுவல்ல என்று களத்தில் முதல்வர் என்று டிசைன் பண்ணச் சொன்னார் திருமாவளவன் முதல்வர் ஆவதுதான் ஒட்டுமொத்த தொண்டர்களின் இலக்கு. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் அதற்கு ஏற்ற சூழல் இல்லை என்பதால் யாரும் அவர் பேச்சை மீறுவதில்லை. அதை மீறி ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக செயல்பட்டதால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா இடைநீக்கத்திற்கு பிறகு தொண்டர்களின் குரலாக ஒழிப்பேன் என்பது, த.வெ.க-வில் போன்ற மற்ற கட்சிகளில் இணைவது, இல்லையென்றால் மீண்டும் கட்சியில் கட்டுபாடுடன் இணைவேன் என்று சொல்வதெல்லாம் அவரின் தனிப்பட்ட முடிவு. வி.சி.க.-வை அவர்தான் லைம் லைட்டில் வைத்தார் என்ற கருத்துக்கு நான் முரண்படுகிறேன். வெல்லும் ஜனநாயக மாநாட்டை அவர் நடத்தவில்லை. அதுபோல 25க்கும் மேற்பட்ட மாநாட்டை திருமாவளவன் நடத்தியிருக்கிறார். தொண்டர்களின் ஒட்டுமொத்த உழைப்பு அந்த மாநாட்டில் அடங்கியிருக்கிறது. ஆதவ் அர்ஜுனா மட்டும்தான் நடத்தினார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். அவர் நடத்திய வாய்ஸ் ஆஃப் காமன் என்ற நிறுவனத்திடம் மாநாட்டை நடத்த திருமாவளவன் பணம் கொடுத்தார். அதற்கு கட்சியின் தொண்டர்கள் அனைவரும் நிதி கொடுத்துள்ளனர். ஆதவ் அர்ஜுனா பணம் கொடுத்துத்தான் மாநாடு நடத்த வேண்டும் என்ற அவசியம் திருமாவளவனுக்கு இல்லை.
அம்பேத்கர் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு ஆதவ் அர்ஜுனா கட்சியில் இணைந்தார். அவருடன் நாங்களும் ஒன்றாக நின்று பணியாற்றியிருக்கிறோம். ஆனால் அவர் வந்த பிறகுதான் விடுதலை சிறுத்தைகள் உயிர்ப்பித்தது என்று சொல்வதற்கெல்லாம் இடமில்லை. திருமாவளவன் 1990-ல் வி.சி.க.வுக்கு தலைமையேற்றபோது இருந்ததைவிட இப்போது 2 எம்.பி மற்றும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் அளவிற்கு அங்கீகாரம் பெற்றுள்ளோம். இதற்கு திருமாவளவனின் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் காரணம். 2003ல் உதய சூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட்ட திருமாவளவன் வெற்றிக்குப் பிறகு தலித் மக்களின் சுயமரியாதைக்காக அந்த எம்.எல்.ஏ. பதவியை தூக்கிப்போட்டு வந்தார். ஆதவ் அர்ஜுனா இடைநீக்கத்தில் அழுத்தம் கொடுக்கும் இடத்தில் தி.மு.க.வும் இல்லை. அப்படி தி.மு.க. அழுத்தம் கொடுத்தால் அதற்கு அடங்கி போகிற கட்சி வி.சி.க.-வும் கிடையாது. அடங்க மறு, அத்துமீறு, திமிறி எழு என்பதுதான் திருமாவளவனின் முதன்மை முழக்கமே. அதே போல் தி.மு.க.வும் அழுத்தம் கொடுக்க எந்த அவசியமும் இல்லை. தி.மு.க. சொல்வதைக் கேட்டு வி.சி.க. அப்படியே நடக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. திருமாவளவன் சுயமரியாதை மிக்க தலைவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு வெள்ள நிவாரண நிதி கொடுக்கும் நோக்கில்தான் அமைந்தது. அதற்கும் ஆதவ் அர்ஜுனா இடை நீக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை.
சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க பயணிக்கிறது. அப்படித்தான் இந்தியா கூட்டணியும் உருவாகியிருக்கிறது. அதில் முக்கிய புள்ளியாக திருமாவளவனும் இருக்கிறார். அதே போல் ஆதவ் அர்ஜுனா பேசிய ஆட்சி, அதிகார பங்கு கருத்திலும் முரண்படவில்லை. திருமாவளவனின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதில்தான் ஆதவ் அர்ஜுனா மீது முரண்பட்டு நிற்கிறோம். எங்கு முரண்படுகிறோம் என்றுதான் முக்கியம். பெரியார் முரண்பட்டதால்தான் பகுத்தறிவு வந்தது. அம்பேத்கர் முரண்பட்டதால்தான் அரசியலமைப்பு சட்டம் வந்தது. முரண்பாடு மற்றும் விமர்சனங்களுக்கு யாரும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. தி.மு.க.வுடன் ஆதவ் அர்ஜுனா முரண்படுவது அவரின் தனிப்பட்ட விமர்சனம். கட்சிக்கென்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அதை மீறினனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.-வை எதிர்க்க வேண்டுமென்றால் பகிரங்கமாக திருமாவளவன் எதிர்த்துவிடுவார். அவருக்கு பயந்து நடுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வி.சி.க. யாருடன் கூட்டணி வைக்கிறதோ அவர்கள்தான் ஆட்சிக்கு வர முடியும். அது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.-வாக இருந்தாலும் சரி. கூட்டணி தர்மத்திற்காகத்தான் ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் கட்டுப்படச் சொன்னார் என்றார்.