நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தொடர், வரும் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75வது ஆண்டு எட்டியதை குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவாதத்தை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் கடந்த 13ஆம் தேதி தொடங்கி வைத்தார். அந்த விவாதத்தில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (16-12-24) மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “1950 இல் உச்ச நீதிமன்றம் கம்யூனிஸ்ட் பத்திரிகையான ‘கிராஸ் ரோட்ஸ்’ மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இதழான ‘ஆர்கனைசர்’ ஆகியவற்றிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ஆனால் அதற்கு பதிலளிக்கும் விதமாக, அப்போதைய இடைக்கால அரசாங்கம் முதல் அரசியலமைப்பு திருத்தம் தேவை என்று நினைத்தது. அதை காங்கிரஸ் கொண்டு வந்தது. அது அடிப்படையில் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகும். கருத்துச் சுதந்திரம் பற்றி இன்றும் பெருமை பேசும் ஜனநாயக நாடான இந்தியா, இந்தியர்களின் பேச்சுச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலும், அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஓராண்டுக்குள் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முதல் இடைக்கால அரசு கொண்டு வந்தது.
மஜ்ரூஹ் சுல்தான்புரி மற்றும் பால்ராஜ் சாஹ்னி இருவரும் 1949 இல் சிறையில் அடைக்கப்பட்டனர். 1949 இல் மில் தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் மஜ்ரூஹ் சுல்தான்புரி, ஜவஹர்லால் நேருவுக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு கவிதையை வாசித்தார். அதனால் அவர் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது. அவர் மன்னிப்பு கேட்க மறுத்து சிறையில் அடைக்கப்பட்டார். பேச்சு சுதந்திரத்தை முடக்கிய சாதனை காங்கிரஸின் சாதனை இந்த இரண்டு நபர்களுடன் மட்டும் நிறுத்தவில்லை. 1975 இல் மைக்கேல் எட்வர்ட்ஸ் எழுதிய அரசியல் வாழ்க்கை வரலாறு ‘நேரு’ என்ற புத்தகம் தடை செய்யப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அவரது மகனை கேள்வி கேட்டதற்காக ‘கிஸ்ஸா குர்சி கா’ படத்திற்கும் தடை விதித்தனர்.
குடும்பத்துக்கும், வம்சத்துக்கும் உதவுவதற்காக காங்கிரஸ் கட்சி துணிச்சலுடன் அரசியல் சட்டத்தைத் திருத்திக் கொண்டே இருந்தது. இந்தத் திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்த அல்ல, அதிகாரத்தில் இருப்பவர்களைக் காக்க, குடும்பத்தை வலுப்படுத்த இந்தச் செயல்முறை பயன்படுத்தப்பட்டது” எனப் பேசினார்.